கிண்ணியாவில் ஏற்பட்ட படகு விபத்து! கிழக்கு மாகாண அனுராதா யகம்பத் (Anuradha Yagambath) விடுத்துள்ள செய்தி

கிண்ணியாவில் குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்தது தொடர்பில் உரிய விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் கோரிக்கை விடுத்துள்ளார்.

 

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கிண்ணியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறிஞ்சாக்கேணி பகுதியில் படகு கவிழ்ந்ததில் 4 பாடசாலை மாணவர்கள் உட்பட 6 பேர் உயிரிழந்த சம்பவம் இன்று பதிவாகியது.

குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் இருந்து இன்று (23) காலை பாடசாலைக்கு வருகை தந்த மாணவர்களுடன் பொதுமக்களும் படகில் பயணித்த தாகவும் தெரியவருகின்றது.

இதில் மொத்தமாக 21 பேர் பயணித்த தாகவும் அதில் சகு சஹி (மூன்றரை வயது), சஹ்லா,(ஆறு வயது), பரிஸ் பஹி (ஆறு வயது), சப்றியா (30 வயது), சேகப்துல் காதர் (70 வயது), எஃப்.சரீன் (எட்டு வயது), ஆகியோர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிய வருகின்றது.

இதேவேளை நீரில் மூழ்கிய இருபத்தி ஒரு பேரில் 13 பேர் கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதுடன் மேலதிக சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு இரண்டு பெயர்களை அனுப்பி வைத்துள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை கிண்ணியா பிரதேச இளைஞர்களினால் வீதிகள் மறைக்கப்பட்டு வீதி மறியல் போராட்டங்களை மேற்கொண்டு வந்தனர்.

அத்துடன் ஊடகவியலாளர்களின் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதுடன் சில ஊடகவியலாளர்களின் கையடக்கத் தொலைபேசிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கிண்ணியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஊடகவியலாளர்களினால் பிடிக்கப்பட்ட புகைப்படங்கள் பரிசீலனை செய்யப்பட்டு ஆர்ப்பாட்டக்காரர்களினால் அனைத்து புகைப்படங்களும் அழிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த சிறுவர்களுக்கு நீதி வழங்குமாறு கோரி தொடர்ச்சியாக இளைஞர்கள் போராட்டத்தை மேற்கொண்டு வந்தனர்.