மாங்குளத்தில் 91 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவு!

வடமாகாணத்திற்கும் புத்தளம், அனுராதபுரம், திருகோணமலை மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் இன்று எச்சரித்துள்ளது.

அதன்படி இன்று பிற்பகல் 01 மணி முதல் நாளை பிற்பகல் 01 மணி வரையான காலப்பகுதிக்கு இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இக்காலப்பகுதியில் குறித்த பகுதி மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் மாங்குளம்,துணுக்காய் வீதியில் உதயசூரியன் கிராமம்,கற்குவாரி 50 வீட்டுத்திட்டம் போன்ற கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.


அத்துடன், மாங்குளம் – துணுக்காய் வீதியில் உள்ள உதயசூரியன் கிராமத்தின் பல பகுதிகளிலும் வெள்ள நீர் காரணமாக 25 வரையிலான குடும்பங்கள் பாதிப்படைந்துள்ளதுடன், பலரது வீடுகளுக்குள் வெள்ள நீரும் புகுந்துள்ளது.

இரவு வேளையும் தொடர்ச்சியாக மழை பெய்யுமாக இருந்தால் பல மக்கள் இடம்பெயர வேண்டிய நிலை வரும் எனவும்,தாழ்நில பகுதிகளில் உள்ள மக்களை அவதானமாக இருக்குமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவான மழை வீழ்ச்சி மாங்குளம் பிரதேசத்தில் பதிவாகியுள்ளது.இன்று சுமார் மூன்று மணி நேரத்தில் 91 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக நீர்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளதுடன், வவுனிக்குளத்தில் 63 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.