வௌ்ளவத்தை பகுதியில் ஒருவர் மீது கூரிய ஆயுதத்தால் கொடூர தாக்குதல்!

கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் காயப்படுத்தப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் காயமடைந்தவர், களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

எவ்வாறாயினும், குறித்த தாக்குதலுக்கான காரணம் மற்றும் காயமடைந்த நபர் தொடர்பான தகவல்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வௌ்ளவத்தை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

இதேவேளை, கிளிநொச்சி – பரந்தன் – சிவபுரம் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார். 27 வயதான ஒருவரே கூரிய ஆயுதத்தால் தாக்கி இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரு குழந்தையின் தந்தையான குறித்த நபர், தமது வீட்டுக்கு அருகிலுள்ள தற்காலிக கொட்டிலிலேயே கடந்த சில நாட்களாக வசித்து வந்துள்ளார். இன்று காலை குறித்த கொட்டிலில் அவர் சடலமாக காணப்பட்டதை கண்ட பிரதேச மக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.

இந்த சம்பவம் நேற்றிரவு இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். தாக்குதல் சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.