யாழில் பிரபல உணவு விடுதியில் சைவ சாப்பாட்டில் வண்டுகள் – மேலும் அதிர்ச்சிகள் உள்ளே!

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள பிரபல தனியார் உணவு விடுதியில் சைவ உணவை ஓடர் செய்து சாப்பிட்டவர்களுக்கு சாப்பாட்டினுள் வண்டுகள் இறந்த நிலையில் காணப்பட்டமை பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இதை விட அசைவ உணவை ஓடர் செய்து சாப்பிட்டவர்களுக்கு உணவுடன் சாப்பாட்டு பாத்திரங்கள் அழுக்கு நீக்க பயன்படும் உலோக சுருள்கள் உணவுடன் கடி பட்டுள்ளது.

இந்த உலோக சுருள் உணவுடன் சேர்ந்து வயிற்றினுள் செல்லும் போது குடல் போன்ற உடலுறுப்புக்களை கிழித்து விடும் என்பதோடு உடலை விட்டு வெளியேறாது உயிராபத்தினையும் ஏற்படுத்தும்.ஒரு சிலர் இவற்றை விழுங்க முன்னரே இனங்கண்டு விட்டாலும் ஏனயவர்கள் கவனிக்காது இவற்றையும் சேர்த்தே உண்ணவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

உடனேயே குறித்த உணவு விடுதியினருக்கு அறிவித்த போதும் பணியிலிருந்தவர்கள் தங்கள் முகாமையாளருக்கு உடனே அறிவிப்பதாக தெரிவித்து தட்டை அப்படியே வாங்கி சென்றார்கள். ஆனால் குறித்த உணவு விடுதியினால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததோடு அதை பற்றி அலட்சியமாக பேசி மழுப்பி விட்டார்கள்.

மீண்டும் பணம் செலுத்தும் போது கவுண்டரில் இது பற்றி தெரிவித்த போது அவர்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்ததையோ அவை பற்றி முன்னர் புகாரளித்ததையோ தெரியாதது போல நடந்து கொண்டார்கள்.குறித்த உணவு விடுதிகள் பொது சுகாதார பரிசோதகர் மற்றும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளின் கண்காணிப்பில் இல்லையா? அல்லது அவர்களும் அது போன்றே அலட்சியமாக இருக்கிறார்களா என்பது பொது மக்களின் கேள்வியாக இருக்கிறது.

இதே போல முன்னர் இன்னொரு வாடிக்கையாளருக்கு மிகவும் பழுதடைந்த மீண்டும் மீண்டும் வேக வைத்த கோழி காலினை உணவுடன் பரிமாறியிருக்கிறார்கள். அவர் அது பற்றி குறிப்பிட்ட போதும் அவற்றை பற்றி கண்டு கொள்ளாது வழக்கம் போல பில்லை நீட்டியிருக்கிறார்கள்.குறித்த உணவு விடுதியில் சில சமயம் கீழ் தளத்தில் வாடிக்கையாளர்களை அமரவைத்து உணவு பரிமாறுவார்கள், சில சமயம் மேல் தளத்தில் அமர வைத்து உணவு பரிமாறுவார்கள் வழக்கமாக செல்லும் வாடிக்கையாளர்களாக இருந்தாலும் மேல் தளத்தில் உணவு பரிமாறும் நாட்களில் விடையம் தெரியாது கீழ் தளத்தில் அமர்ந்து விட்டால் கண்டும் காணாதது போல காத்திருக்க வைத்துவிட்டு தங்கள் வேலையை பார்ப்பார்கள்.

ஒரு முறை விபத்தால் படியேறுவதில் சிரம பட்ட வழக்கமாக செல்லும் வாடிக்கையாளர் ஒருவர் தன் நிலையை எடுத்து சொல்லியும் மேல் தளத்திற்கு சென்றால் தான் சாப்பாடு தருவோம் என பணியாளர்கள் சொல்ல அதன் பின் அவர் அந்த உணவு விடுதிக்கே செல்வதை நிறுத்திவிட்டதாக தெரிவித்தார்.சுத்த சைவம் சாப்பிடுபவருக்கு உணவில் வண்டினை கொடுப்பதும், தட்டு கழுவும் உலோக சுருள்களை உணவுடன் கலந்து கொடுப்பதும், வாடிக்கையாளர்களை மணிக்கணக்காக காத்திருக்க வைப்பதும், அலட்சியமாக பொறுப்பற்று நடந்து கொள்வதும், தாம் தவறு செய்தாலும் அதை மூடி மழுப்ப பார்ப்பதும் என இன்னும் எத்தனை காலங்களுக்கு பணம் கொடுத்து சாப்பிட வரும் வாடிக்கையாளர்களின் உயிர்கள் உணர்வுகளுடன் விளையாட போகிறார்கள்.

தற்போது இந்த விடையங்கள் சமூக வலைத்தளங்களில் வாடிக்கையாளர்கள் மற்றும் பொது மக்களால் பகிரப்பட்டு கொண்டிருப்பதால் உணவு, சுகாதாரம், நுகர்வோர் நலன் சம்பந்த பட்ட அதிகாரிகள் உடன் நடவடிக்கை எடுப்பார்களா?