மன்னார் – கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட யாழ். யுவதி! தீவிரமாக இளைஞரை தேடும் பொலிஸார்

மன்னார் – கோந்தைபிட்டி கடற்கரை பகுதியில் இருந்து இளம் பெண் ஒருவர் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

கடந்த 13ம் திகதி குறித்த யுவதியின் சடலம் கண்டெடுக்கப்பட்ட நிலையில், உயிரிழந்தவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 22 வயதான கீர்த்தனா என அடையாளம் காணப்பட்டுள்ளார். உயிரிழந்த யுவதியின் தாய் சடலத்தை அடையாளம் காட்டியுள்ளார்.

குறித்த யுவதி உறவினர் ஒருவருடன் மன்னார் ஆடைத் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த நிலையில், கடந்த வியாழக்கிழமை (11) பணி முடிவடைந்த பின்னர் மன்னார் பேருந்து தரிப்பிடத்திற்கு சென்றுள்ளார்.

இதன் போது தனது ஆண் நண்பர் ஒருவருடன் பேருந்து நிலையத்தில் நடந்துசெல்லும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி காணொளி ஒன்றும் வெளியாகியிருந்தது.

பின்னர் வியாழக்கிழமை மாலை மன்னார் பிரதான பாலத்திலிருந்து அப்பெண் குதித்த நிலையில் 13ம் திகதி பெண்ணின் சடலம் கோந்தை பிட்டி கடற்கரை பகுதியில் மீட்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், குறித்த பெண் மரணத்திற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இது கொலையா? அல்லது தற்கொலையா? என்ற ரீதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், குறித்த பெண்ணுடன் பேருந்து நிலையத்தில் இருந்த இளைஞரை கண்டுபிடிக்க விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மன்னார் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.