உங்களுக்கு பிடித்த கலரை சொல்லுங்கள்? உங்களை பற்றிய நாங்க சொல்றோம்..!

 

 

எந்த ஒரு பொருளை வாங்குவதாக இருந்தாலும், அதில் எந்த கலரை தேர்வு செய்வது என்பது தான், முதலில் ஏற்படும் குழப்பம். முதலில் குழம்பினாலும் கடைசியில் எடுக்கப்போவது என்னவோ, நமக்கு பிடித்த கலரை தான். இந்த உலகில் நம்மை சுற்றி எண்ணிலடங்காத வண்ணங்கள் இருக்கின்றன. ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வண்ணம் பிடிக்கும். அதற்கு சில உளவியல் காரணங்கள் இருக்கின்றன. உங்க ஃபேவரைட் கலர் உங்கள பத்தி என்ன சொல்லப்போகுதுனு இப்ப தெரிஞ்சிக்கலாமா?

நீலம்

கடல் எப்படி வானத்தை பிரதிபலிக்கிறதோ, அப்படி தான் நீல நிறமும். நீல நிறம் பிரதிபலிப்பை குறிக்கிறது. இந்த நிறத்தை விரும்புகிறவர்கள் புத்திசாலிகளாகவும், நம்பகத்தன்மை மிக்கவராகவும் இருப்பார்கள். பொதுவாக அமைதியான குணமுடையவர்கள் நீல நிறத்தின் ரசிகர்கள். புத்தகம் படிப்பது போன்ற பழக்கவழக்கங்கள் இவர்களிடம் காணப்படும் இயற்கையாகவே புத்திசாலிகளாக இருப்பார்கள் நீல நிற விரும்பிகள்.

சிவப்பு

சிவப்பு ஆளுமையின் நிறமாகவும் சக்தியை குறிப்பிடும் நிறமாகவும் கருதப்படுகிறது. மனிதக்கண்களுக்கு எளிதில் பரிட்ச்சையமாகும் நிறம் சிவப்பு. இந்த நிறத்தை அதிகம் விரும்புகிறவர்கள், மிகவும் தைரியமான குணமும், அதிக தன்னம்பிக்கையும் உடையவர்களாக இருப்பார்கள். செக்ஸ் விஷயத்தில் இவர்களுக்கு அதிகம் ஈடுபாடு இருக்கும்.

மஞ்சள்

மஞ்சள் உணர்வுப்பூர்வமான நிறம். நம் நாட்டில் இதனை மங்களகரமான நிறம் என்று கூறுவர். சூரியனின் நிறமான இதை அதிகம் விரும்புகிறவர்கள் எந்த தருணத்திலும் தளராத மனமுடையவர்களாகவும், தன்நம்பிக்கை நிறைந்தவர்களாகவும் இருப்பார்கள், இவர்களுக்கு கற்பனை வளம் அதிகம் இருக்கும்.

பச்சை

இயற்கையின் நிறமான பச்சை அமைதியையும், நல்லிணக்கத்தையும் குறிக்கும் நிறமாகும். கண்களுக்கு குளுமை தரும் இந்த நிறத்தை அதிகம் விரும்பும் நபர்கள், பணவிஷயத்திலும், உறவுகள் விஷயத்திலும் மிகவும் பாதுகாப்பான சுழலையே எதிர்பார்ப்பார்கள். நம்மை பற்றி பிறர் என்ன நினக்கிறார்கள்? என்பது இவர்களின் சிந்தனையில் எப்போதும் இருக்கும். வெற்றியை மட்டுமே விரும்பும் நபர்களாக இருப்பார்கள், இந்த பச்சை நிற விரும்பிகள்.

ஆரஞ்சு

இது மஞ்சளும் சிவப்பும் கலந்த கலவை. இதனால் இந்த நிறத்தை நேசிப்பவர்களிடம் மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தை விரும்புகிறவர்களின் அனைத்து குணமும் இருக்கும். மேலும் இவர்கள் வேடிக்கையான நபர்களாகவும் இருப்பார்கள்.

கருப்பு

 

இருளின் நிறமாக இருந்தாலும், கருப்பு நவீனத்துவத்தை குறிக்கும் நிறமும் கூட. இந்த நிறத்தை அதிகம் விரும்புகிறவர்கள் திறமையானவர்களாகவும், கம்பீரமான பாவனையுடனும் இருப்பார்கள். கருப்பு நிறம் உணர்வுப்பூர்வமாக பாதுகாப்பான நிறமாகவும் கருதப்படுகிறது.

வெள்ளை

வெள்ளை தூய்மையின் நிறம்.எளிமையின் நிறம். இந்த நிறத்தை விரும்புகிறவர்கள், சுற்றுப்புரத்தை சுத்தமாக வைத்துக்கொள்வதில் அதிகம் அக்கறை கொள்வார்கள். எதையும் மிகவும் உன்னிப்பாக உற்று நோக்கும் பண்பும் இவர்களிடம் இருக்கும். மற்றவர்களிடம் உள்ள குறைகளை கண்டறிவதோடு, அதை எடுத்து சொல்லவும் தயங்காதவர்கள் இந்த வெண்மை விரும்பிகள்.