முச்சக்கர வண்டி மற்றும் தனியார் வாகனங்களில் பயணிக்கும் நபர்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்..!!

நாடாளவிய ரீதியில் ஊடரங்குச் சட்டம் நீக்கப்பட்ட போதும், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் முச்சக்கரவண்டி மற்றும் மோட்டார் உள்ளிட்ட வாடகை வாகன சாரதிகளுக்காக பொலிஸாரினால் விசேட அறிவித்தலொன்று விடுக்கப்பட்டுள்ளது.அலுவலகம் மற்றும் நிறுவனங்களுக்கு பணிகளுக்கு அழைக்கப்பட்டவர்கள் பணிக்கு செல்லும் போது அவர்களுக்கு தனியார் வாகனங்களில் பயணிக்க முடியும். இதன்படி அவர்கள் முச்சக்கரவண்டி அல்லது கார் உள்ளிட்ட வாடகை வாகனங்களில் பணிக்கு செல்லவும் பணி முடிந்து வீட்டுக்கு வரவும் முடியும். ஆனால் அவர்கள் அந்த வாகனங்களில் பயணிக்கும் போது தாம் பணிக்கு செல்லும் அல்லது பணி முடிந்து வருவதற்கான ஆதாரங்களை கைவசம் வைத்திருக்க வேண்டும்.அத்துடன் முச்சக்கரவண்டி மற்றும் கார் உள்ளிட்ட வாடகை வாகன சாரதிகள் பணியாளர்களை அழைத்துச் செல்லும் போது அவர்களிடம் பணிக்கு செல்லும் மற்றும் பணி முடிந்து வீடு திரும்பும் ஆவணம் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.அதேபோன்று சாரதிகள் தாங்கள் அழைத்துச் சென்ற நபரை குறிப்பிட்ட இடத்தில் இறக்கிய பின்னர் அவரை அழைத்துச் சென்றதற்கான ஆதாரங்கள் எதனையாவது வைத்திருக்க வேண்டும். வேண்டுமென்றால் அந்த நபரின் பணியிட ஆவணங்களில் எதனையாவது கையடக்க தொலைபேசியில் வைத்திருக்கலாம். இல்லையேல் அந்த நபரின் தொலைபேசி இலக்கம் உள்ளிட்ட ஏதேனும் ஒன்றின் மூலம் வீதி கடமையில் இருக்கும் பொலிஸார் கேட்கும் போது சமர்பிக்க வேண்டி வரலாம்.
அதேபோன்று பணியாளர் ஒருவரை ஓர் இடத்தில் இறக்கிவிட்டு வந்தால் தனிப்பட்ட தேவைகளுக்காக செல்லும் யாரையும் ஏற்றிச் செல்ல முடியாது. சாரதி மாத்திரமே வண்டியில் இருக்க முடியும். பணியாளர்கள் தவிர வேறு யாரையும் ஏற்றிச் சென்றால், அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கையெடுக்கப்படும் என பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.