மட்டக்களப்பு, சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தில் குடும்பஸ்த்தர் ஒருவர் பலி!

மட்டக்களப்பு, சந்திவெளியில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இருவர் பலத்த காயமடைந்துள்ளதாக சந்திவெளி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்தானது நேற்று மாலை 7 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

செங்கலடி பிரதேசத்தில் இருந்து வாழைச்சேனை நோக்கி சென்ற முச்சக்கர வண்டியுடன் எதிரே வந்த லோரி நேருக்கு நேர் மோதியதனால் இவ் விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது 4 பிள்ளைகளின் தந்தையான கறுவாக்கேணியைச் சேர்ந்த து.விஜயநாதன் (வயது 51) என்பவரே உயிரிழந்துள்ளார்.

காயமடைந்த இருவரும் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மட்டு. போதனா வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.

சந்திவெளி பொலிஸார் குறித்த விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.