வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கப்படும், பாராளுமன்ற உறுப்பினர் அறிவிப்பு

எதிர்வரும் நாட்களில் மக்களுக்கு பல நிவாரணங்களை வழங்கும் நல்ல வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் முன்வைப்பார் என பாராளுமன்ற உறுப்பினர் சஞ்சீவ எதிரிமான்ன தெரிவித்துள்ளார்.

மேலும், இவ்வருட வரவு செலவுத் திட்டத்தில் அரச ஊழியர்களின் சம்பளப் பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கோவிட் தொற்று பரவியிருக்கும் நிலையில் இந்த முறை வரவு செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

கோவிட் காரணமாக வேலை இழந்தவர்கள் மற்றும் அன்றாட வாழ்வாதாரத்தை இழந்தவர்கள் ஏராளமானவர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலான வரவு செலவுத் திட்டத்தை நிதியமைச்சர் முன்வைப்பார் என நான் நம்புகிறேன்.

இப்போது நாடு முழுவதும் விவசாயிகள் ‘போராட்டம், ஆசிரியர்கள் போராட்டம், அரசியல் போராட்டங்கள் என்று பலர் நடத்தி வருகின்றனர். இது உண்மையில் மீண்டும் நாடு முழுவதும் கோவிட் அலைக்கு வழி வகுக்கிறது. அவர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க போராட்டங்கள் நடத்த வேண்டும். சுகாதாரத்துறையினால் கோவிட் கட்டுப்பாட்டுகள் விதிக்கப்பட்டிருக்கும் நேரத்தில் நாடு முழுவதும் போராட்டங்கள் நடத்துவதை ஏற்க முடியாதென அவர் மேலும் தெரிவித்துள்ளார்.