கொரோனாவுடன் மது வாங்குவதற்கு 2 நாட்களாக வரிசையில் நின்ற நபரால் பெரும் அதிர்ச்சி…!!

தமிழகம், தேனியில் கொரோனா பாதிக்கப்பட்ட ஒருவர் இரண்டு நாட்களாக டாஸ்மாக் சென்று கூட்டத்தில் வரிசையாக நின்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழகத்தில் நேற்று மட்டும் 526 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதே வேளை கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 6,535 ஆக அதிகரித்துள்ளது. சென்னையில் மட்டும் 279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.தேனியில் மொத்தம் 50 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. நேற்று தேனியில் கோயம்பேட்டில் இருந்து வந்த லாரி ஓட்டுநர் ஒருவருக்கு கொரோனா வந்தது குறிப்பிடத்தக்கது. கடந்த ஒரு வாரமாக இவர் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். இந்த நிலையில், நேற்று இவருக்கு சோதனை முடிவுகள் வந்தது. இதில் கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இவர் தேனி தேவதானப்பட்டியை சேர்ந்தவர்.இதில் என்ன சிக்கல் என்றால், இவரை வீட்டில் தனிமையில் இருக்கும்படி அரசு அதிகாரிகள் கூறி இருந்தனர். ஆனால், இவர் வீட்டில் தனிமையில் இருக்காமல் நேற்று முதல் நாள் மதுக்கடைக்கு சென்றார். தமிழகத்தில் டாஸ்மாக் திறந்து இருந்த இரண்டு நாளும் அவர் மதுக்கடைக்கு சென்று மது வாங்கி இருக்கிறார். டாஸ்மாக் வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக இவர் நின்றுள்ளார்.அது மட்டுமின்றி தோட்டம் ஒன்றுக்கு சென்று அங்கு நண்பர்களுடன் மது அருந்தி சமைத்து சாப்பிட்டுள்ளார். அதன்பின்தான் இவருக்கு கொரோனா ஏற்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனால், தேனியே தற்போது ஆடிப்போய் உள்ளது. இந்த நபர் மூலம் தேனியில் இன்னும் பலருக்கு கொரோனா ஏற்பட்டு இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது.இதனால், இவர் தொடர்பு கொண்ட நபர்களை கண்டுபிடிக்கும் பணி நடந்து வருகிறது.தேவதானப்பட்டியில் உள்ள டாஸ்மாக் கடையில் மதுவாங்கிய நபர்கள் யார் என்று விசாரிக்கப்பட்டு வருகிறது. இவர்களின் காண்டாக்ட் தீவிரமாக பரிசோதிக்கப்பட்டு வருகிறது. அதோடு தற்போது மொத்தமாக தேவதானப்பட்டி சீல் செய்யப்பட்டு, அங்கு சோதனை முடுக்கிவிடப்பட்டுள்ளது. இந்த நபர் மூலம் தேனியில் பலருக்கு கொரோனா பரவி இருக்கலாம் என்றும் அஞ்சப்படுகிறது.