எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக அரசாங்கம் அறிவிப்பு

எதிர்வரும் 31ம் திகதி துக்க தினமாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளது.

அத்துடன், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் உள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களும் குறித்த திகதியில் மூடப்படும் என உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது.

மறைந்த வணக்கத்துக்குரிய கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரரின் இறுதிக்கிரியைகளை முன்னிட்டு இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரரின் இறுதிக் கிரியைகள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கொழும்பில் உள்ள சுதந்திர சதுக்கத்தில் பூரண அரச மரியாதையுடன் நடைபெறவுள்ளது.

இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இன்றைய தினம் கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தியிருந்தார்.  பேலியகொட வித்யாலங்கார பிரிவேனாவுக்குச் சென்ற ஜனாதிபதி தேரரின் பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

இதனையடுத்து வணக்கத்துக்குரிய கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரரின் இறுதி கிரியைகளை பூரண அரச அனுசரணையுடன் நடாத்துமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.

மேலும், பிக்குகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அதற்கான ஏற்பாடுகள் குறித்தும் கேட்டறிந்தார்.

மறைந்த வணக்கத்துக்குரிய கலாநிதி வெலமிட்டியவே குசலதம்ம தேரர் களனிப் பல்கலைக்கழகத்தின் உபவேந்தரும் , கொழும்பு மற்றும் சிலாபத்தின் தலைமை நாயக்க தேரராகவும், பேலியகொட வித்தியாலங்கார பிரிவேனாவின் பணிப்பாளராகவும் கடமையாற்றினார்.

கொழும்பில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த அவர் தனது 85வது வயதில் கடந்த 27 ஆம் திகதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.