இலஞ்சம் பெற்ற போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பொலிஸாருக்கு நேர்ந்த கதி!

மட்டக்களப்பில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கரவண்டி சாரதியிடம் 5,000 ரூபாவை இலஞ்சமாகப் பெற்ற, போக்குவரத்து பிரிவில் கடமையாற்றிவரும் 3 பொலிஸார் உடனடியாக கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பிலிருந்து செங்கலடி பிரதேசத்துக்கு முகத்துவாரம் வீதி ஊடாக குறித்த முச்சக்கர வண்டி சென்றுகொண்டிருந்தது. இதன்போது சவுக்கடி பாலத்துக்கு அருகில் வீதிச் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போக்குவரத்து பொலிஸார், முச்சக்கரவண்டியை சோதனையிட்டபோது சாரதி அனுமதிப்பத்திரமின்றி முச்சக்கரவண்டியை செலுத்தியதனைக் கண்டுபிடித்தனர்.

இதனையடுத்து சாரதியிடம் போக்குவரத்து பொலிஸார், அனுமதிப்பத்திரமின்றி வண்டியை செலுத்திய குற்றச்சாட்டில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப் போவதாக தெரிவித்ததுடன், அதனை செய்யாது அங்கிருந்து விடுவிக்க 10,000 ரூபா இலஞ்சமாக கோரியுள்ளனர்.

இதனையடுத்து சாரதி, 5,000 ரூபாதான் தன்னிடம் உள்ளது எனக் கூறி அதனைக் போக்குவரத்து பொலிஸாருக்கு கொடுத்துள்ளார். இதனையடுத்து அவர் விடுவிக்கப்பட்ட நிலையில் முச்சக்கரவண்டி சாரதி உடனடியாக மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்துக்குச் சென்று தன்னிடம் 5,000 ரூபா இலஞ்சமாக போக்குவரத்து பொலிஸார் பெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ளார்.

இது தொடர்பாக கிழக்கு பிராந்திய சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் அறிவுறுத்தலில் பொலிஸ் அத்தியட்சகர் குமாரசிறி தலைமையிலான குழுவினர் விசாரணைகளை மேற்கொண்ட னர்.

இதனையடுத்து குறித்த போக்குவரத்து பிரிவில் கடமையாற்றும் 3 பொலிஸாரையும் உடன் அமுலுக்குவரும் வரையில் புதன்கிழமை முதல் கடமையிலிருந்து இடைநிறுத்தப்பட்டார். மேலும்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.