நாளை முதல் வடக்கு மாகாண மக்கள் பின்பற்ற வேண்டிய மிக முக்கிய அறிவுறுத்தல்கள்….

நாளை திங்கட்கிழமை தொடக்கம் ஊரடங்கு தளர்த்தப்படுவதன் காரணமாக பொதுமக்கள் பின்பற்ற வேண்டிய அறிவுறுத்தல்களை வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்.இது தொடர்பில் அவர் அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, ”நாட்டின் பொருளாதாரத்தையும், மக்களின் வாழ்வாதரத்தையும் மேம்படுத்தும் நோக்குடன் ஊரடங்கு உள்ளிட்ட பல கட்டுப்பாடுகளில் தளர்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளன.ஆயினும் நாட்டில் கொரோனா பரம்பல் அபாயம் நீங்கிவிடவில்லை என்பதனை பொதுமக்கள் தெளிவாக புரிந்து கொள்ளவேண்டும்.மக்களை மிகவும் விழிப்புடனும் அவதானத்துடனும் பின்வரும் நடைமுறைகளினை பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வேலைக்குச் செல்வோர் அத்தியாவசிய விடயங்கள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை கொள்வனவு செய்ய வெளியே செல்வோர் தவிர்ந்த ஏனையோர் வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு வழங்குமாறு மீண்டும் வலியுறுத்துகின்றோம்.அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே செல்பவர்கள் தாம் செய்ய வேண்டிய வேலைகளுக்காக அடிக்கடி வெளியே செல்லாது ஒரே தடவையில் பல கருமங்களை நிறைவேற்றிக் கொள்ளக் கூடியவகையில் திட்டமிட்டு செயற்படவும். வெளியே செல்பவர்கள் அலுவலகங்களிலும் பொது இடங்களிலும், வர்த்தக நிலையங்களிலும் பொதுப்போக்குவரத்தின் போதும் இரண்டு பேருக்கு இடையில் ஆகக் குறைந்தது 1 மீற்றர் தூர இடைவெளியைப் பேணவும்.வெளியில் செல்லும்போது இயன்றளவு பிரத்தியேகப் போக்குவரத்து முறைகளைப் பாவிக்கவும். (உதாரணமாக நடந்து செல்லல், துவிச்சக்கர வண்டியில் செல்லல்).அலுவலகங்கள் வர்த்தக நிலையங்கள் பொது இடங்கள் என்பவற்றுக்கு உள்ளே நுழையும் முன்னர் கைகளை சவர்க்காரமிட்டு முறைப்படிக் கழுவிக் கொள்ளவும். வெளியில் சென்று விட்டு வீடு திரும்பிய பின்பும் கைகளை சவர்க்காரமிட்டு முறைப்படி கழுவிக்கொள்ளவும்.காய்ச்சல், இருமல், தொண்டைநோய் போன்ற அறிகுறிகள் உள்ளவர்கள் பொது இடங்களுக்குச் செல்வதை தவிர்த்தல் வேண்டும்.ஊரடங்கு தளர்த்தப்பட்டாலும் பொது நிகழ்வுகள் வைபவங்கள், கூட்டங்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் போன்றவற்றுக்கு தொடர்ந்தும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பதை மனதில் கொள்ளவும்.இயன்றளவு வீட்டில் தயாரிக்கப்பட்ட உணவுகளையே உண்பதனை பழக்கப்படுத்திக் கொள்வதுடன் உணவகங்களில் இருந்து உணவைப் பெறவேண்டி இருப்பின் உணவை எடுத்துச் சென்று உட்கொள்ளவும். மேலும் உணவகங்களில் ஒன்றுகூடி உணவு அருந்துவதை தவிர்த்துக் கொள்ளவும்.உங்கள் பிரதேசத்துக்கு யாராவது புதியவர்கள் வருகை தந்திருந்தால் உங்களது பகுதி சுகாதார மருத்துவ அதிகாரி, பொதுசுகாதார பரிசோதகர் அல்லது கிராம அலுவலருக்கு அறியத்தரவும்.அவர்களை தொடர்பு கொள்வதில் சிரமம் இருப்பின் வடமாகாண சுகாதார திணைக்களத்தின் அவசர அழைப்பெண் 021-222-6666 இற்குத் தகவல் வழங்கவும்” எனவடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் வெளியிட்ட அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.