பொருட்களின் விலைகள் மேலும் அதிகரிக்கலாம் !

குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்பட்டுள்ள கப்பல் கட்டணம் மேலும் சில காலத்திற்கு அப்படியே நீடிக்கும் எனவும் இதன் காரணமாக இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலைகள் அதிகரிக்கலாம் என பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

அத்தியவசிய பொருட்களின் விலைகள் உலக சந்தையில் அதிகரித்துள்ளமைக்கு மேலதிகமாக துறைமுகங்களுக்கு செல்லும் கப்பல்களின் கட்டணங்களும் அதிகரித்துள்ளன.

இதனால், இந்த செலவானது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் விலை அதிகரிப்புக்கு நேரடியான காரணமாக அமையும். அத்தியவசிய பொருட்களின் விலைகள் மாத்திரமல்லாது பெட்ரோலியம், எரிவாயு உட்பட எரிபொருள் விலைகள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது உலக சந்தையில் குறிப்பிடத்தக்களவு அதிகரித்துள்ளன.

குறிப்பாக எரிபொருளின் விலைகள் அதிகரித்தமை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டியின் முதல் எட்டு மாதங்களுக்கு எரிபொருளை இறக்குமதி செய்ய இலங்கைக்கு மேலதிகமாக 704.7 மில்லியன் டொலர் செலவாகியுள்ளது.

இதன் காரணமாக எதிர்வரும் காலங்களில் தொடர்ந்தும் விலை அதிகரிப்பு தொடர்பான கஷ்டங்களை மக்கள் எதிர்நோக்க நேரிடும் எனவும் பொருளாதாரம் மற்றும் நிதி தொடர்பான நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளார்.