சினிமா பாணியில் போதைப்பொருள் கடத்தி வந்த வெளிநாட்டு பெண்!

சினிமா பாணியில் சுமார் 100 கொக்கேய்ன் போதைப்பொருள் உருண்டைகளை விழுங்கிய நிலையில் இலங்கை வந்த வெளிநாட்டு பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக சுங்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து தற்போது வரையில் 51 உருண்டைகள் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உகண்டா நாட்டை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். உகண்டாவில் இருந்து கட்டார் விமான சேவைக்கு சொந்தமான QR 664 இலக்க விமானத்தில் இன்று காலை குறித்த பெண் இலங்கை வந்துள்ளார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தின் வௌியேறும் பகுதியில் அவரை ஸ்கேன் இயந்திரம் மூலம் சோதனையிட்ட போது இந்த கொக்கேய்ன் தொகை அவரின் வயிற்றில் மறைத்து வைத்து கொண்டு வரப்பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து குறித்த பெண்ணிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர் கொக்கேய்ன் போதைப்பொருள் கடத்தி வந்ததை ஒப்புக்கொண்டிருந்தார்.

இந்நிலையில், தற்போது குறித்த பெண்ணின் வயிற்றில் இருந்து கொக்கேய்ன் போதைப்பொருளை அகற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.