ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் பலி!

ஹட்டன் – கொழும்பு பிரதான வீதியில் வட்டவளை கரோலினா பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் வீதியில் வழுக்கி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று இரவு 7.30 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய எந்தனி டொமினிக் என்ற இளைஞரே இவ்வாறு பலியாகியுள்ளதாக வட்டவளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வட்டவளை பகுதியில் தமது பணியினை நிறைவு செய்துவிட்டு நாவலப்பிட்டி பகுதிக்கு மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மழையுடன் கூடிய காலநிலைக் காரணமாக வீதியின் வழுக்கல் நிலையினால் மோட்டார் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் வழுக்கியதால் இந்த விபத்து சம்பவித்து இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மோட்டார் சைக்கிளைச் செலுத்தியவரின் தலைக்கவசமும் முறையாகத் தலையில் பொருத்தப்படாதிருந்ததால் அது தலையிலிருந்து கழன்று சென்றுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

உயிரிழந்தவரின் சடலம் வட்டவளை வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் பிரேதப் பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

குறித்த விபத்து தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.