நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவரா நீங்கள்? எனிமே சாப்பிடாதீங்க ஆபத்தாம்!

பொதுவாக நம்மில் பலர் இரவு வேளைகளில், நேரம் காலம் பார்க்காமல் ஓட்டல்களுக்கு சென்று, பிரியாணியை வெளுத்து கட்டுகிறார்கள். இதையே வழக்கமாக்கி, தினமும் நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.

இப்படி நள்ளிரவில் பிரியாணி சாப்பிடுவது, உடல்நலத்திற்கு கெடுதியாக அமையும் என்கிறார்கள், மருத்துவர்கள். ஏனெனில் இறைச்சியும், பிரியாணியை சுவையூட்டும் எண்ணெய் பொருட்களும், செரிமான பிரச்சினைகளை உருவாக்குவதோடு, மனித உடலின் இயல்பான இயக்கத்தையும் சீர்குலைத்துவிடும்.

நள்ளிரவு பிரியாணிக்கு குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை பயன்படுத்தினால் இருமடங்கு பாதிப்பு ஏற்படும். சில ஓட்டல்களில், பிரியாணியை மீண்டும் சூடுபடுத்தி பரிமாறும் பழக்கம் இருப்பதுண்டு.

இவை உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கின்றது.  அதனால் நள்ளிரவில், இதுபோன்ற ‘ஹெவி’ உணவுகளை தவிர்க்க வேண்டும். பிரியாணி மட்டுமின்றி, நள்ளிரவில் பீட்சா, பாஸ்தா, நூடுல்ஸ், சாக்லெட், காரமான இறைச்சி, சோடா பானங்களையும் தவிர்க்க சொல்கிறார்கள்.

இரவு நேரத்தில் பிரியாணி போன்ற உணவுகளை வயிறு நிறைய சாப்பிடுவதால் அது சரியாக ஜீரணம் ஆகாமல் போய்விடுகிறது. இதனால் கூடுதல் கலோரிகள் கொழுப்பாக தேங்க ஆரம்பிக்கிறது.

தொடர்ச்சியாக இரவு நேரத்தில் வயிறு நிறைய சாப்பிட்டு வந்தால் செரிமான மண்டலம் சீர்குலைந்து போய்விடும். பிறகு குடல் அலர்ஜி, இரைப்பை புண், இரப்பை அழற்சி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகளை உருவாக்கிவிடும்.

இரவு நேரத்தில் வயிறுமுட்ட சாப்பிடுவதால் அது தூக்கத்தை கெடுக்கிறது. இதனால் மறுநாள் காலையில் உங்களுக்கு சோர்வை உருவாக்கும்.

எனவே இவற்றை தவிர்த்துவிட்டு இரவு பசிக்கு இட்லி, இடியாப்பம், தோசை ஆகியவற்றை சாப்பிடுவதுதான் நல்லது என்று அறிவுறுத்துகிறார்கள்.