மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ள யாழ்ப்பாணத்துக்கான விமான சேவை!

கோவிட் தொற்று நோய் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த கொழும்பு – யாழ்ப்பாணம் இடையிலான உள்நாட்டு விமான சேவைகள் எதிர்வரும் நவம்பர் மாத நடுப்பகுதியில் மீண்டும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சுற்றுலாத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்ட விமான சேவையை மீண்டும் ஆரம்பிக்குமாறு சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க(Prasanna Ranatunga), விமான நிலைய அதிகாரிகளுக்கு வழங்கிய ஆலோசனைக்கு அமைய தற்போது அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

சுகாதார வழிக்காட்டல்களை கவனத்தில் கொண்டு விமான சேவைகளை நடத்துமாறும் அமைச்சர் ஆலோசனை வழங்கியுள்ளார்.

கடந்த வருடம் மார்ச் மாதம் நாடு முடக்கப்படுவதற்கு முன்னர், கொழும்பு இரத்மலானை விமான நிலையத்தில் இருந்து யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்திற்கு வாரத்தில் இருமுறை விமான சேவைகள் நடத்தப்பட்டன.

இந்த உள்நாட்டு விமான சேவைகளை தினமும் நடத்த முடியுமா என்பதை ஆராய்ந்து தேவையான நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.