கொரோனா வைரஸின் தீவிரம்…யாழில் 10 குடும்பங்களும் 3 வீடுகளும் தனிமைப்படுத்தல்..!

சீனாவில் தொடங்கி இன்று உலகளாவிய ரீதியில் அனைவரையும் கொன்று குவிக்கும் கொரோனா வைரஸால் இலங்கையிலும் இருவர் உயிரிழந்துள்ளனர். கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நேற்றைய தினம் நீர்கொழும்பில் வசிக்கும் நபர் ஒருவர் உயிரிழந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் மூன்று வீடுகளைச் சேர்ந்த குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.யாழ்ப்பாணம் நாவாந்துறை ஐந்து சந்திப் பகுதியில் ஹாதி அபூபக்கர் வீதியில் உள்ள மூன்று வீடுகளே தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.குறித்த நபர் அண்மையில் திருமண நிகழ்வு ஒன்றுக்காக யாழ்ப்பாணம் வந்து போனதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.கடந்த 7ம் திகதி தொடக்கம் 9ம் திகதி வரையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் பங்கேற்பதற்குச் சென்றுள்ளார்.

அங்கு இரு நாள்கள் தங்கியிருந்த பின்னர் நீர்கொழும்பு திரும்பியுள்ளார்.இந்நிலையில் குறித்த நபருடைய நடமாட்டங்கள், பழகிய, சந்தித்த நபர்கள் குறித்த விசாரணையை குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் இலங்கையில் உள்ள சகல புலனாய்வு கட்டமைப்புக்களும் நேற்று மாலையே ஆரம்பித்திருக்கின்றன.இதன்படி, யாழ்.மாவட்டத்திலும் தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டிருப்பதுடன், யாழ்ப்பாணத்தில் அவர் தங்கியிருந்த இடம், சந்தித்த நபர்கள், திருமண வீட்டில் கலந்து கொண்டவர்கள்,என சுமார் 120 பேருடைய பெயர் பட்டியல் முதல் கட்டமாக தயாரிக்கப்பட்டு அவர்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டிருந்தன.
அதன்பின்னர் குறித்த திருமணம் நடைபெற்ற வீடு உள்ளடலங்கலாக மூன்று வீடுகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.தற்போது 10ற்கு மேற்பட்ட குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்டதோடு 3 வீடுகள் முற்றாக தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.அப்பகுதி கிராமசேவகர் மற்றும் பொலிஸாரின் கண்காணிப்பில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.