இலங்கையில் மிக விரைவில் நிர்மாணிக்கப்படும் விளையாட்டுப் பல்கலைக்கழகம்..!!

லங்கையில் பல்வேறு வசதிகளையும் உள்ளடக்கிய வகையில், விளையாட்டுப் பல்கலைக்கழகமொன்றை அமைப்பதற்கான வேலைத்திட்டங்களை விளையாட்டுத்துறை அமைச்சு முன்னெடுத்துள்ளது. குறித்த பல்கலைக்கழகமானது ஹோமாகம, தியகம மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விளையாட்டரங்கை அண்மித்துள்ள 126 ஏக்கர் காணியில் எதிர்வரும் செப்டம்பர் மாதமளவில் ஆரம்பிக்கப்படும் என விளையாட்டுத்துறை அமைச்சு அறிவித்துள்ளது.இதன்படி, கிரிக்கெட், றக்பி, கால்பந்தாட்டம், எல்லே, மெய்வல்லுனர் ஆகியவற்றுக்கான மைதானங்கள் கரப்பந்தாட்டம், வலைப்பந்தாட்டம், மேசைப்பந்தாட்டம், பேட்மிண்டன், போன்ற விளையாட்டுக்களுக்கான உள்ளக அரங்குகள், நீச்சல் தடாகம், உடற்பயிற்சி நிலையங்கள் என விளையாட்டுடன் தொடர்புடைய அனைத்து வசதிகளும் குறித்த விளையாட்டுப் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படவுள்ளது.விளையாட்டுப் பல்கலைக்கழத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான ஆரம்ப கட்டத் தகுதியாக தேசிய மட்டத்தில் எந்தவொரு விளையாட்டிலும் ஈடுபட்டு இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.அத்துடன், விளையாட்டுப் பல்கலைக்கழத்தில் நடைபெறவுள்ள பாடங்கள், விரிவுரைகள் மற்றும் அதற்கான காலப்பகுதி என்பன குறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றன.