கிளிநொச்சி நகரில் இன்று கொரோனோ தொற்று நீக்கும் நடவடிக்கை..!!

கிளிநொச்சி, இராணுவத் தலைமையகத்தின் ஏற்பாட்டில் கொரோனோ தொற்று நீக்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.குறித்த செயற்பாடு, இன்று (சனிக்கிழமை) காலை 9 மணியளவில் முன்னெடுக்கப்பட்டது. பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதிகளான டிப்போ சந்திமுதல் கரடிபோக்கு சந்தி வரையான ஏ-9 வீதிப் பகுதியில் குறித்த தொற்று நீக்கும் செயற்திட்டம் படையினரால் முன்னெடுக்கப்பட்டது. கிளிநொச்சி இராணுவத் தலைமையகக் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஜெயந்த குணரட்ணவின் ஆலோசனைக்கு அமைவாக கிளிநொச்சி 57ஆவது படைப்பிரிவின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் டி சில்வாவின் வழி நடத்தலில் காலாற்படையினரால் குறித்த தொற்று நீக்கும் செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.இதன்போது, பொதுமக்கள் அதிகம் நடமாடும் வங்கிகள், பேருந்து நிலையம் மற்றும் தரிப்பிடங்கள், வர்த்தக நிலையங்கள், நடை பாதைகள், மக்கள் கூடும் பகுதிகள் என தொற்று நீக்கம் செய்யப்பட்டது. கிளிநொச்சி பொதுச் சுகாதாரப் பிரிவினரின் கண்காணிப்பில் தொற்று நீக்கி விசிறப்பட்டதுடன், சுகாதார அதிகாரிகளும் பொலிஸாரும் நிகழ்வில் கலந்துகொண்டனர்.