ஆட்டிப்படைக்க வருகிறது சனிப்பெயர்ச்சி – தனுசு ராசிக்காரர்களுக்கு என்ன நடக்கும்? வாங்க பார்க்கலாம்

டிசம்பர் 19 ஆம் தேதி விருச்சிக ராசியிலிருந்து தனுசு ராசிக்குப் பெயர்கிறார். கிட்டதட்ட இரண்டறை ஆண்டுகளுக்கு இந்த வீட்டில் தான் தங்கியிருப்பார். அதனால் மற்ற ராசிக்காரர்களைவிட தனுசு ராசிக்காரர்களின் மேல் தான் சனிபகவானின் முழு பார்வையும் இருக்கும்.

தனுசு ராசிக்காரர்கள் இந்த சனிப்பெயர்ச்சியின் மூலம் தற்போது நடந்து கொண்டிருக்கும் ஏழரைச்சனி அமைப்பில் ஜென்மச்சனி எனும் நிலையை அடைகிறீர்கள். இதன்மூலம் சனிபகவான் சாதகமற்ற பலன்களை இனி உங்களுக்குத் தர இருக்கிறார்.

இருந்தாலும் ஜென்ம சனியின் பயன்களை இரண்டு வகையாக நாம் பிரித்துப் பார்க்கலாம். ஐம்பது வயதுக்கு மேலானவர்களுக்கு இந்த சனி இரண்டாம் சுற்று என்கிற அமைப்பில் பொங்கு சனியாக செயல்பட்டு நல்ல பலன்களை தரும். ஆகவே நடுத்தர வயதுக்காரர்களுக்கு இந்தப் பெயர்ச்சியின் மூலம் நல்ல பலன்கள் மட்டுமே நடக்கும். நிச்சயமாக கெடுபலன்கள் இருக்கவே இருக்காது.

ஜென்ம சனி என்பது ஒருவருக்கு எதிர்மறை அனுபவங்களின் மூலம் வாழ்க்கையின் இன்னொரு பக்கத்தைக் கற்றுக் கொடுக்கும் என்பதால் தனுசு ராசி இளைஞர்களுக்கு சில சாதகமற்ற பலன்களைச் செய்து அதன் மூலம் எதிர்கால வாழ்க்கையை எப்படி நல்லவிதமாக அமைத்துக் கொள்வது என்கிற படிப்பினையை உணர்த்தும்.

 

எனவே நடுத்தர வயதைக் கடந்தவர்கள், குறிப்பாக கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் இளம்பருவத்தில் ஏழரைச்சனியை 1987, 1988, 1989-ம் ஆண்டுகளில் கடுமையாக உணர்ந்தவர்களுக்கு இந்தப் பெயர்ச்சி பொங்கு சனியாக நல்ல பலன்களைச் செய்து வாழ்க்கையில் சுபிட்சத்தை தரும். எனவே சனியைக் கண்டு பயம் கொள்ளத் தேவையில்லை.

இன்னும் சொல்லப்போனால் சனிபகவான் குருவின் வீடான தனுசு, மீனத்தில் இருக்கும் போது, சுபத்துவம் அடைந்து நல்ல பலன்களை மட்டுமே தருவார் என்பது விதி.

மேலும் பிறந்த ஜாதக அமைப்பில் சனி சுபத்துவம் மற்றும் சூட்சும வலுப் பெற்றவர்களுக்கும் ஏழரை மற்றும் அஷ்டமச்சனி காலங்களில் தாங்க முடியாத கெடுபலன்களைத் தருவது இல்லை. ஆகவே கோட்சார ரீதியில் ஏழரைச்சனி நடக்கிறதே என்று கவலைப்பட்டுக் கொள்ளாமல்முறையான வழிபாடுகளை செய்வதன் மூலம் சாதகமற்ற பலன்களை கூட நல்ல பலன்களாக மாற்றிக் கொள்ள முடியும் என்பதை தனுசுராசிக்காரர்கள் நினைவில் கொள்வது நல்லது.

அதேநேரத்தில் எந்த ஒரு செயலையும் கடும் முயற்சிக்குப் பின்னர்தான் செய்ய முடியும் என்பதால் நீங்கள் அனைத்து விஷயங்களையும் நிதானமாகவும், திட்டமிட்டும் சரியாகச் செய்ய வேண்டி இருக்கும். குழப்பமான சூழ்நிலையில் தவறான முடிவுகள் எடுக்க வாய்ப்பு இருக்கின்றன. எதையும் ஒன்றுக்கு இரண்டு முறை யோசித்தும், வீட்டில் இருக்கும் அனுபவம் வாய்ந்த பெரியவர்களிடம் ஆலோசித்தும் முடிவு எடுப்பது நன்மையைத் தரும்.

இளபருவத்தினர் 2018 ஆகஸ்டுக்குப் பிறகே ஜென்மச் சனியின் பாதிப்புகளை உணர ஆரம்பிப்பீர்கள். அதற்குப் பிறகு கண்டிப்பாக எந்த விஷயத்திலும் கவனமாகத்தான் இருக்க வேண்டும். ராசியில் சனி இருப்பதால் ஏதேனும் ஒரு விஷயத்தைப் பற்றிய தீவிர சிந்தனையும், மனக்குழப்பமும் இருக்கும். மனதைப் போட்டு உழப்பிக் கொண்டிருப்பீர்கள்.

தொழில், வேலை, வியாபாரம் போன்ற அமைப்புக்கள் சுமாரான பலன்களைத்தான் தரும். வேலைப்பளு அதிகம் வருவதற்கு வாய்ப்பு இருக்கின்றன. வியாபாரிகள், விவசாயிகள், சொந்தத்தொழில் செய்பவர்கள் எந்த நேரமும் பரபரப்பாக அலைந்து கொண்டிருப்பீர்கள். ஆனால் அதற்குத் தகுந்த பிரதிபலன் கிடைப்பது கஷ்டமாக இருக்கும்.

அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கும் வேலைப்பளு அதிகமாக இருக்கும். விருப்பம் இல்லாத ஊருக்கு மாற்றம் அல்லது துறைரீதியான தேவையில்லாத மாற்றங்கள் நடந்து உங்களை சங்கடப்படுத்தலாம். அனைத்தையும் பொறுமையாக எதிர்கொள்வதன் மூலம் சிக்கல்களில் இருந்து நல்லபடியாக வெளிவர முடியும்.

பணியாளர்கள் அதிகாரிகளைப் பகைத்துக் கொள்ள வேண்டாம். அவர்கள் சொல்வதைக் கேட்டு நடந்து கொள்வது நல்லது. அலுவலகங்களில் உங்களைப் பிடிக்காதவர்கள் கை ஓங்கும் சூழ்நிலை இருக்கும். உடன் வேலை செய்பவர்களிடம் வீண் அரட்டை, மேலதிகாரியின் செயல் பற்றிய விமர்சனங்கள் போன்ற விஷயங்களை தவிர்ப்பது நல்லது.

எவரையும் நம்ப வேண்டாம். குறிப்பாக கீழ்நிலைப் பணியாளரிடம் விலகி இருப்பது தான் நல்லது.

இளைய பருவத்தினருக்கு வேலை கிடைப்பது சிரமமாக இருக்கும். உங்களுடைய திறமைகளைப் பிறர் அறிய மாட்டார்கள். நீங்களும் எப்போதும் சற்று சோம்பலாகவே இருப்பீர்கள்.

உங்களை விட திறமைக் குறைவானவருடன் வேண்டா வெறுப்பாக வேலை செய்ய வேண்டியிருக்கும். இந்தக் காலகட்டத்தில்தான் காதல் வரும். கூடவே காதல் தோல்வியும் வரும். மன அழுத்தங்கள் அதிகமாகும்.

குடிப்பழக்கம் இருப்பவர்கள் ஜென்மச்சனி முடியும்வரை அந்தப் பழக்கத்தை நிறுத்துவது நல்லது. குறிப்பாக குடித்து விட்டு வண்டி ஓட்டவே செய்யாதீர்கள். தேவையில்லாத பிரச்னைகளைத் தவிர்க்க இயலும்.

வெளிநாட்டு விஷயங்கள் நல்லபலன் அளிக்கும் என்பதால் இப்போது வெளிநாட்டு வேலைக்கோ அல்லது வெளிதேசத்தில் மேற்படிப்பு படிக்கவோ செல்ல முடியும். அதனால் நன்மைகளும் இருக்கும். அதேநேரத்தில் வெளிநாட்டில் தனிமைத் துயரை அனுபவிப்பீர்கள். ஆனால் அது குடும்பத்துக்கு தெரியக் கூடாது என்பதற்காக சந்தோஷமாகக் காட்டிக் கொள்வீர்கள்.

வம்பு, வழக்குகள் வரும் நேரம் இது. போலீஸ் ஸ்டேஷன் போகாதவர்களையும், கோர்ட்டு என்றால் என்னவென்றே தெரியாதவர்களையும் சனி அங்கே போக வைத்து விடுவார் என்பதால் அனைத்திலும் கவனமாக இருப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.
நண்பர்களும் விரோதிகளாக மாறுவார்கள் என்பதால் உறவுகளிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
நடுத்தர வயதுடையவர்கள் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் செலுத்த வேண்டும். ஒருமுறையேனும் முழு உடல் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்.

கணவன்-மனைவிக்குள்ளும் சந்தேக விதையை சனி விதைப்பார். எனக்குத் தெரியாமல் அக்கா, தங்கைகளுக்கு செய்கிறாரோ என்ற சந்தேகம் மனைவிக்கும், எனக்குத் தெரியாமல் தன் குடும்பத்துக்கு செய்கிறாளோ என்று கணவருக்கும் நினைக்கத் தோன்றும். ஆண்-பெண் இருவருக்கும் சந்தேகத்தை தூண்டிவிடுவார் சனி.

ஏற்கனவே கடன் வாங்கி சிக்கலில் இருப்பவர்களுக்கு புதிய கடன்களும் சேர்த்து கழுத்தை நெறிக்கும். எக்காரணத்தைக் கொண்டும் அதிக வட்டிக்கு கடன் வாங்காதீர்கள். அவசரம் என்று கிடைக்கும் இடத்தில் கிடைக்கும் வட்டியில் பணம் வாங்கினால் பின்னால் கடன் தொல்லை அதிகமாகி, மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும்.

அதிர்ஷ்டம் என்றால் என்ன என்பதே உங்களுக்கு மறந்துபோகும். கடின உழைப்பும் நிறைய சமயங்களில் வீணாய் போகும். அதற்காக முயற்சியைக் கைவிட்டுவிடக்கூடாது.

மொத்தத்தில் இந்தக் சனிப்பெயர்ச்சி சுமாரான பலன்களைத் தரும். மதிப்பு மரியாதை கெடாது என்றாலும் சின்னச்சின்ன சிக்கல்கள் உண்டு. எல்லாவற்றிலும் விழிப்புணர்ச்சியோடு இருந்தால் நன்மைகள்தான்.

பரிகாரங்கள்:

சனிக்கிழமை இரவு சிறிதளவு எள்ளை தலைக்கடியில் வைத்துப் படுத்து மறுநாள் புதிதாக வடித்த சாதத்தில் அதைக் கலந்து காகத்துக்கு படைக்க வேண்டும். கறுப்புநிற நன்றியுள்ள பிராணிக்கு அன்புடன் விருப்பமான உணவு அளிப்பதும், நடக்க இயலாத மாற்றுத்திறனாளி ஒருவருக்கு ஊன்றுகோல் வாங்கிப் பரிசளிப்பதும் சிறந்தது.