ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள் விலகல்!

அங்குரார்ப்பண லங்கா ப்றீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் சம்பியனான ஜவ்னா ஸ்டாலியன்ஸ் அணியின் உரிமையாளர்கள், அதன் உரிமைத்துவத்திலிருந்து கனத்த இதயத்துடன் விலகிக்கொண்டுள்ளனர்.

‘இது ஒரு கவலை தரும் செய்தியாகும். எமது பணியை மீண்டும் செயல் உருவாக்குவதற்கு நாங்கள் எங்களால் ஆன அதிகபட்ச முயற்சியில் ஈடுபட்டோம். ஆனால், அது சாத்தியப்படவில்லை. சுருங்கச் சொல்லின் இப்படி ஒரு முடிவுக்கு வருவோம் என நாங்கள் நிச்சயமாக எண்ணவில்லை’ என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘யாழ்ப்பாணத்தை நேசிப்பதாலும் இலங்கையில் எமது பணி அர்த்தம் மிக்கதாக அமைய வேண்டும் என்பதாலும் எமது உரிமைத்துவப் பணியை தொடர்வதில் நாங்கள் உறுதியாக இருந்தோம்.

ஆனால், வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மை இன்மை காரணமாக எங்களால் தொடர்ந்து செயல்பட இயலாமல் போனது.

தற்போதைய அணிக்குப் பதிலாக வேறொரு அணியைப் பொறுப்பேற்குமாறு லீக்குடன் தொடர்புபட்டவர்கள் வாய்மொழி மூலம் கோரியது உட்பட சில விசித்திரமான நிகழ்வுகள் சம்பவித்ததைத் தொடர்ந்தே இந்நிலை உருவானது.

முழு விடயமும் விசித்திரமானது. மேலும், இவ்வாறான விசித்திரமான நிகழ்வுகளுக்கு மத்தியில் எந்த ஒரு சிறந்த செயற்பாட்டாளராலும் உரிமைத்துவத்தையோ லீக்கையோ வெற்றிகரமாக நடத்துவது என்பது சாத்தியமற்றது.

எமது இரசிகர் கூட்டம், எமது சமூக ஊடகம், அணிக்கான முதலீடு ஆகியவற்றை நீங்கள் நோக்கும்போது ஜவ்னா ஸ்டாலியன்ஸ் மிகவும் உறுதியாக இயங்கும் ஸ்தாபனம் என்பதைப் புரிந்துகொள்வீர்கள். நாங்கள் என்ன செய்கின்றோம் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.

எமது முதலீட்டாளர்கள் சிலர் அமெரிக்காவில் இருபதுக்கு 20 கிரிக்கெட்டை ஆரம்பிக்கவுள்ளனர். இலங்கையில் எமது கால்தடத்தை படிப்பதன் மூலம் வீரர்களை ஊக்குவித்து வளர்க்கலாம் எனவும் பிரதான லீக்கில் அவர்களை சுழற்சி முறையில் விளையாடச் செய்யலாம் எனவும் மீண்டும் எல்பிஎல்லில் இணைய முடியும் எனவும் நாங்கள் ஆரம்பத்தில் நம்பினோம்.

ஆனால், துரதிர்ஷ்டவசமாக இந்த நிலைக்கு பின்னர் நாங்கள் வேறு இடத்தை நாட வேண்டிய நிர்ப்பந்தத்துக்கு உள்ளானோம்.

இரசிகர்களே மன்னிக்கவும். நாங்கள் உங்கள் அனைவரையும் நேசிக்கின்றோம். அந்த (கடந்த) வருடம் மிகவும் இனிய பொழுதுபோக்காக அமைந்தது. இப்போதைய நிலையில் நாங்கள் இருப்பது மிகவும் துரதிர்ஷ்டமானது’ என ஜவ்னா ஸ்டாலியன்ஸ் ஸ்தாபனத்தின் பேஸ்புக்கில் விரிவாக தெரிவிக்கப்பட்டுள்ளது.