அதிபர் – ஆசிரியர்களிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை !

தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு சேவைக்கு திரும்புமாறு அதிபர் – ஆசிரியர்களிடம் கோரிக்கை விடுப்பதாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்ததார். இதன்போது அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நிதி அமைச்சருடனான சந்திப்பின் போது வரவு – செலவு திட்டத்தில் முன்வைக்கப்பட்டுள்ள யோசனை என்ன என்பது பற்றி அறிந்து கொள்வது அதிபர் – ஆசிரியர் சங்கங்களின் எதிர்பார்ப்பாகக் காணப்பட்டால் அதனை அறிவிக்க முடியும்.

அது குறித்து எனக்கும் தெரியாது. எனவே பாராளுமன்றத்தில் வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை காத்திருக்குமாறு கோருகின்றோம். மாணவர்களுக்கு கற்பித்தலில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான 5,000 ரூபா கொடுப்பனவை வழங்குவதற்கான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

எனவே தீர்மானங்களை ஏற்றுக் கொண்டு வரவு – செலவு திட்டம் சமர்ப்பிக்கப்படும் வரை சேவைக்கு திரும்புமாறு கோரிக்கை விடுப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும் அவ்வாறு சேவைக்கு திரும்பும் பட்சத்தில் அதிபர் – ஆசிரியர்கள் மீதான சமூகத்தின் மதிப்பு மேலும் உயர்வடையும் என்றும் கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்தார்.