இலங்கையில் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ளாதவர்களுக்கு ஏற்படப்போகும் நிலை

இலங்கையில் கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசி மருந்தை பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்கள், பொது இடங்களுக்கு செல்வதற்கும் ஒன்றுகூடுவதற்கும், அரசாங்கம் விரைவில் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜீ. சுகுணனை மேற்கோள்காட்டி இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரசிற்கு எதிரான தடுப்பூசி பெற்றுக்கொள்ளாத 20 வயதுக்கு மேற்பட்டவர்கள் தத்தமது சுகாதார வைத்திய அதிகாரிகள் பிரிவிலுள்ள தடுப்பூசிகள் வழங்கும் மையங்களுக்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக் கொள்ளுமாறு வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

எதிர்வரும் காலங்களில் தடுப்பூசிகளை பெறலாமென எதிர்பார்த்து, தற்போது கிடைக்கின்ற தடுப்பூசியை பெற்றுக் கொள்ளாது விட்டால் பலத்த பாதிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிக்ககூடிய வாய்ப்புகள் காணப்படும் என அவர் எச்சரித்தார்.

20 தொடக்கம் 29 வயதுக்குட்பட்ட இளைஞர்கள் மற்றும் யுவதிகளுக்கு தடுப்பூசி பெற்றுக் கொள்வதில் ஆர்வம் குறைந்து காணப்படுகின்றது எனவும், வதந்திகளை நம்பாமல் எம்மையும் சமூகத்தையும், நாட்டையும், கொவிட்19 தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள விரைவாக தடுப்பூசியை பெற்றுக் கொள்ளுமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உலக சுகாதார ஸ்தாபனம் சைனோபார்ம் தடுப்பூசியை அங்கீகரித்துள்ளது, ஆகவே அந்த தடுப்பூசி மிகவும் சிறந்த பாதுகாப்பை வழங்கும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும் கொரோனா வைரஸ் திரிவடைதல் பாரிய சவாலாக எதிர்காலத்தில் வருமாக இருந்தால், தடுப்பூசிகள் பெற்றுக் கொண்டவர்கள் அதில் இருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ள முடியுமெனவும் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் மேலும் குறிப்பிட்டார்.