கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி பெண் வெற்றியை பதிவு செய்துள்ளார்

கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் களமிறங்கிய தமிழ் வம்சாவளி பெண்ணான அனிதா ஆனந்த் (Anita Anand) வெற்றியை பதிவு செய்துள்ளார்.

கனடாவில் இம்முறை இடம்பெற்றுள்ள பொது தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ (Justin Trudeau) தலைமையிலான லிபரல் கட்சி வெற்றி பெற்றுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டு வருகின்றன.

அதன்படி ஜஸ்டின் ட்ரூடோ தலைமையிலான லிபரல் கட்சி 157 இடங்களிலும், கன்சர்வேட்டிவ் கட்சி 122 இடங்களிலும் முன்னிலை வகிப்பதாக தெரிவருகிறது.

இந்த நிலையிலேயே லிபரல் கட்சி சார்பில் Oakville தொகுதியில் போட்டியிட்ட, பொது சேவைகள் மற்றும் கொள்முதல் துறையின் முன்னாள் அமைச்சரான அனிதா ஆனந்த் வெற்றி பெற்றுள்ளார்.

அவர் 14,511 வாக்குகளை பெற்று 45.7 சதவீதத்தை பதிவு செய்துள்ளதுடன், அவரை எதிர்த்து போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் கெரி கொல்போர்ன் 38.4 சதவீத வாக்குகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், அனிதாவின் தந்தை தமிழகத்தை சேர்ந்தவர் என்பதுடன், தாயார் பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்தவர் என தகவல்கள் தெரிவிக்கின்றன.