கொழும்பில் மேலும் 3 பெறுமதியான இடங்களை விற்பனை செய்யும் அரசாங்கம்

கொழும்பில் மேலும் 3 பெறுமதியான காணிகளை 99 வருட குத்தகைக்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இது தொடர்பான விளம்பரங்கள் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நேற்று பத்திரிகைகளில் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள 3 காணிகளுக்கு இவ்வாறு விலை மனு கோரப்பட்டுள்ளது. பத்திரிகைகளில் வெளியான அறிக்கைக்கு அமைய, கொழும்பு 10 டீ.ஆர்.விஜேவர்தன மாவத்தையின் இலக்கம் 12இல் அமைந்துள்ள இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள இடம், இலக்கம் 38இல் அமைந்துள்ள மக்கள் வங்கி கிளையின் அமைந்துள்ள இடம் மற்றும் இலக்கம் 40இல் அமைந்துள்ள சதொச களஞ்சிய அறை வளாகம் அமைந்துள்ள இடம் ஆகியவற்றை இந்த திட்டத்திற்காக வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

இலங்கை கண்காட்சி மற்றும் மாநாட்டு மண்டபம் அமைந்துள்ள இடத்தின் குத்தகை அடிப்படையிலான பெறுமதி 3.7 பில்லியன் ரூபாவாகும். மக்கள் வங்கி கிளையின் அமைந்துள்ள இடத்தின் குத்தகை அடிப்படையிலான பெறுமதி 1.3 பில்லியன் ரூபாவாகும்.

சதொச களஞ்சிய அறை வளாகம் அமைந்துள்ள இடத்தின் குத்தகை அடிப்படையிலான பெறுமதி 1.6 பில்லியன் ரூபாவாகும்.

இந்த காணிகளின் செயற்பாடுகளுக்காக யோசனை முன்வைப்பதற்கு ஒரு மாத காலப்பகுதியே வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.