தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் குறித்து சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ள தகவல்

30 வயதுக்கு மேற்பட்ட தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள், பண்டாரவளை மற்றும் மன்னார் நகரங்களுக்குள் நுழைவதைத் தடை செய்வதற்கான நடவடிக்கை குறித்து தாம், எவ்வித வழிகாட்டுதல்களையும் வெளியிடவில்லை என்று சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.சுகாதார சேவைகளின் பிரதிப் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத், சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், இதனை தெரிவித்துள்ளார்..


இது போன்ற ஒரு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமாயின் சரியான வழிமுறை இருக்க வேண்டும் என்று அவர் கூறினார்.இப்போது வரை, அத்தகைய நடவடிக்கையை செயல்படுத்துவது தொடர்பான எந்த வழிகாட்டுதல்களையும் தாம் வெளியிடவில்லை என்று அவர் கூறியுள்ளார்.

தடுப்பூசி அட்டை இல்லாமல் குறித்த இரண்டு நகரங்களுக்குள் நுழைய முயன்றவர்களை பாதுகாப்புப் படையினர் திருப்பி அனுப்பப்படுவதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.எனினும், கோவிட் தடுப்பு குறித்த அந்தந்த மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்களாலேயே உரிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

காவல்துறை அதிகாரிகளுக்கு, காவல்துறை அதிபரால் அல்லது அரசாங்கத்தினால், இந்த நடவடிக்கையை மேற்கொள்ளும்படி அறிவிக்கப்படவில்லை என்று அவர் கூறியுள்ளார்.தமக்கு கிடைத்த தகவல்களின் படி, இரண்டு நகரங்களில் தொடங்கப்பட்ட நடவடிக்கை, ஒரு நாள் மட்டுமே செயல்படுத்தப்பட்டது என்று பேச்சாளர் தெரிவித்துள்ளார்.