யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் – தீவிர விசாரணையில் பொலிஸார்

யாழ்.காங்கேசன்துறை பொலிஸ் நிலையம் அருகே நேற்று மாலை பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இளைஞனின் மரணம் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

கீரிமலை, நல்லிணக்கபுரத்தை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான 24 வயதான ம.ஜெனுசன் என்ற இளைஞனே யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்தின் அருகே சடலமாக மீட்கப்பட்டார்.

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திலிருந்து 100 மீற்றர் தொலைவில், காங்கேசன்துறை பிரதான வீதியில் சடலம் காணப்பட்டது. இளைஞன் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிள் வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்தது.

அந்தப்பகுதியில் சில காலணிகளும் சிதறிக் காணப்பட்டன. அந்த காலணிக்குரியவர்கள் இன்று இளைஞனுடன் முரண்பட்டது விசாரணையில் தெரிய வந்தது.

நல்லிணக்கபுரத்தில் இன்று நடைபெற்ற மரணவீட்டில் இளைஞர்கள் சிலர் மது அருந்திய பின்னர் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதன் தொடர்ச்சியாக,சம்பந்தப்பட்டவர்கள் பொலிஸ் நிலையம் வந்த போதோ அல்லது பொலிஸ் நிலையம் வந்த இளைஞனை யாராவது விரட்டி வந்து தாக்கினார்களா என ஆராயப்படுகிறது.

இளைஞன் அடித்துக் கொல்லப்பட்டதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இளைஞனின் பின்தலையில் காயம் காணப்படுகிறது. அந்த பகுதியில் இளைஞர்கள் மோதலில் ஈடுபட்டதை பாதசாரிகள் அவதானித்துள்ளனர்.

எனினும், இளைஞன் உயிரிழந்த போது யாரும் அவதானித்திருக்கவில்லை. வீதியோரம் இளைஞன் வீழ்ந்துள்ள தகவலே பொலிசாருக்கு கிடைத்தது. விபத்தில் சிக்கிய இளைஞனாக இருக்கலாமென கருதிய பொலிசார், உடனடியாக இளைஞனை வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.

எனினும், அங்கு அவர் உயிரிழந்திருந்தார். இதன்பின்னரே, இந்த விவகாரத்தில் மர்மம் உள்ளமை தெரிய வந்தது. மரணச்சடங்கில் இளைஞனுடன் முரண்பட்ட ஒரு இளைஞன் சந்தேகத்தின் பெயரில் பொலிசாரால் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.