வெளிநாடுகளில் இருந்து நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

வெளிநாடுகளில் இருந்து வரும் இலங்கையர்களுக்கான பிசிஆர் சோதனை நடைமுறை திருத்தியமைக்கப்பட்டுள்ளது.

இதன்படி, உலக சுகாதார நிறுவனத்தால் அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசியை முழுமையாக பெற்றவர்கள் பிசிஆர் பரிசோதனைக்காக ஹோட்டலில் தங்க வேண்டிய அவசியமில்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தனது டுவிட்டர் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் இவ்வாறு கூறியுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு திரும்பும் இலங்கையர்கள் இரண்டு தடுப்பூசிகளையும் பெற்றிருந்தால் பிசிஆர் சோதனைக்காக ஹோட்டல்களில் தங்க வேண்டிய அவசியமில்லை. நாட்டிற்கு வந்தவுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமானநிலையத்தில் அவர்களுக்கு பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

இதன்போது தொற்று இல்லையென உறுதி செய்யப்பட்டால் அவர்கள் வீடு செல்ல அனுமதிக்கப்படுவார்கள். இந்த திட்டம் அடுத்த வாரம் முதல் அமுலாகும் என அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, வெளிநாடுகளிலிருந்து வருகை தருபவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனைகளின் போதும், அவர்களுக்கான தனிமைப்படுத்தல் வசதிகளை வழங்கும்போதும் அதற்கென பெருமளவு பணம் அறவிடப்படுகின்றமை தொடர்பாக விரைவில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்க்ஷ உத்தரவிட்டுள்ளதாக சுகாதார அமைச்சருக்கு உத்தரவிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.