பாரிய கொரோனா அழிவிற்குப் பின் ஹூபே மாகாணத்தில் மீண்டும் இயங்கத் தொடங்கிய பாடசாலைகள்..!!

கொரோனா வைரஸ் தொற்றினால் மிகப்பெரிய அழிவினை சந்தித்திருந்த சீனா, தற்போது அதிலிருந்து மீண்டு வருகின்றது.


இதனை நிரூபிக்கும் வகையில், சீனாவில் கொரோனா வைரஸ் தொற்று 95 சதவீதம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளதனை அண்மைய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.இந்தநிலையில், கொரோனா வைரஸ் பரவலின் மையமாக விளங்கிய ஹூபே மாகாணத்தில் உள்ள பாடசாலைகள் மீண்டும் தொடங்கியுள்ளன.முதல் கட்டமாக 9 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்கள் வகுப்புகளுக்கு திரும்பியுள்ளனர். அவர்கள் இந்தக் கோடைக்காலத்தில் முக்கியமான தேர்வுகளை எழுத உள்ள நிலையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையின் முதற்கட்டமாக, மார்ச் மாதமே தளர்த்தப்பட்ட தளர்வில் சீனாவின் பிற பகுதிகளில் உள்ள பாடசாலைகள் திறக்கப்பட்டன.இதேபோல, நாட்டின் வடகிழக்கு எல்லையில் உள்ள சீன நகரமான சுஃபென்ஹே, ரஷ்யாவிலிருந்து திரும்பும் பயணிகளிடையே தொற்றுகள் அதிகரித்த பின்னர் அறிமுகப்படுத்தப்பட்ட கொரோனா வைரஸ் கட்டுப்பாடுகளை தளர்த்துவதாக அறிவித்துள்ளது.சீனாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நிலவரப்படி, இரண்டு பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, சீனாவின் தேசிய சுகாதார ஆணையம் தெரிவித்துள்ளது.அத்துடன், 20 புதிய அறிகுறிகள் இல்லாத தொற்றுகளும் அடையாளங்காணப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், இறப்புகள் எதுவும் பதிவு செய்யப்படவில்லை.