கொரோனா தொற்று கண்டிபிடிக்கக்கூடிய இயந்திரம் விரைவில் அறிமுகம் – இலங்கையின் புதிய சாதனை

கொரோனா தொற்றுநோயை கண்டுபிடிப்பதற்கு விரைவான ஆன்டிஜன் பரிசோதனை மற்றும் பி.சி.ஆர் முறைகளே தற்போது இலங்கையில் உள்ளன.

எனினும் கொரோனாவை கண்டுபிடிக்கும் புதிய கருவி ஒன்றை பேராதனைப் பல்கலைக்கழகத்தின் மூத்த விரிவுரையாளர் உள்ளிட்ட குழுவினர் உருவாக்கியுள்ளனர்.

பேராதனை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.டி. லமாவன்சவின் வழிகாட்டுதலில் இந்த கருவியை மூத்த விரிவுரையாளர் ருசிக பெர்னாண்டோ உள்ளிட்ட குழு வடிவமைத்துள்ளது.

இந்த கருவி சுகாதார அமைச்சர் டாக்டர் கெஹெலிய ரம்புக்வெலவிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

இது மலிவாக கிடைப்பதுடன், பாதிக்கப்பட்டவர்களை விரைவாக அடையாளம் காணவும் உதவுகிறது.

ரூபாய் 1,500 மட்டும் செலவு செய்து உங்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டுபிடிக்க முடியும் என அதை உருவாக்கியவர் கூறுகிறார்.

இது இப்போது தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையத்தின் தொழில்நுட்பக் குழுவின் ஒப்புதலைப் பெற்று பதிவுக்காகக் காத்திருக்கிறது.

இதற்கிடையில் இந்த சிறப்பு சோதனை கருவிக்கு  தேசிய மற்றும் சர்வதேச காப்புரிமைகளுக்கு “RT LAMP (Reverse Transcription Loop Mediated Isothermal Amplification)” விண்ணப்பிக்கப்பட்டது.

கொரோனா பேரழிவின் போது இத்தகைய தயாரிப்புகளை உருவாக்குவது மிகவும் முக்கியம் என்று சுகாதார அமைச்சர் கூறினார்.

தடுப்பூசியின் அடிப்படையில் நமது நாடு இப்போது சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. உலகின் மிக உயர்ந்த இடத்தையும் அடைந்துள்ளது என்று அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மேலும், கொரோனா பேரழிவை தோற்கடித்து நாட்டை இயல்பு நிலைக்குக் கொண்டுவருவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் சுகாதார அமைச்சகம் எடுக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.