ஆங்கிலத்தில் பேசும் அதிசய வாத்து !

மஸ்க் வாத்துகள் என்று அழைக்கப்படும் பிசியுரா லோபாடா மற்ற உயிரினங்களை காட்டிலும் ஒலிகளை கேட்டு அதை எளிதில் கற்றுக்கொள்ளக்கூடிய ஒரே நீர்ப்பறவை இனங்கள் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பாடல் பறவைகள், கிளிகள் மற்றும் ஹம்மிங்பேர்ட்ஸ் உள்ளிட்ட பிற பறவைகள் வரிசையில் ஒலிகளை கேட்டு அதை அப்படியே பிரதிபலிக்கும் வாத்துகளுக்கான சான்றுகள் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை.

இது தொடர்பாக செப்டம்பர் 6 அன்று, ராயல் சொசைட்டி பி-யின் Philosophical Transactions-ல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வறிக்கையில் இந்த கண்டுபிடிப்பு குறிப்பிடப்பட்டுள்ளது. இது ஆஸ்திரேலிய மஸ்க் வாத்துகளின் குரல் சாயல் மற்றும் உற்பத்தி கற்றல் என்ற தலைப்பில் இது வெளியாகியுள்ளது. சான்றுகளின் படி, ரிப்பர் என்று அழைக்கப்படும் ஒரு வளர்ப்பு ஆஸ்திரேலிய மஸ்க் வாத்து, “யூ பிளடி ஃபூல்” என்ற வாக்கியத்தை உச்சரிப்பது மட்டுமல்லாமல் வேகமாக சாத்தப்படும் கதவின் சத்தம் மற்றும் சில பேச்சுகளின் ஒலிகளை அப்படியே மிமிக் செய்வதாக கூறப்படுகிறது.

லைடென் பல்கலைக்கழகத்தின் நெறிமுறையாளர்கள் கேரல் டென் கேட் மற்றும் பீட்டர் ஃபுல்லாகர் ஆகியோர் தங்கள் ஆய்வறிக்கையில், ரிப்பரின் குறிப்பிட்ட குரல் வளத்தை அதிலும் அவை “யூ பிளடி ஃபூல்” என்று சொல்லும் போது அது மனித குரலுடன் எந்தளவுக்கு மிக நெருக்கமான ஒற்றுமையைக் கொண்டுள்ளது என்பதை விளக்கியுள்ளனர். மேலும் ரிப்பர் வாத்து கம்பி வேலிக்கு உள்ளே அடைக்கப்பட்டிருக்கும் போது அவை வெளியிடும் ஒலி பதிவு செய்யப்பட்டது.

அவை ஒரு மீட்டருக்கும் குறைவான தூரத்தில் வைக்கப்பட்டிருந்த மைக்ரோஃபோன் மூலம் ஒலிப்பதிவு செய்யப்பட்டது. அப்போது ரிப்பர், பெரும்பாலும் அதனை வளர்த்த உரிமையாளரிடம் இருந்து மீண்டும் மீண்டும் கேட்ட சொற்றொடரின் ஒலியை பிரதிபலித்துள்ளது. ஆனால் அவை எந்த வயதில் இந்த திறனை வெளிப்படுத்தியது என்பது தெரியவில்லை.

மனிதர்களை போல ஒலியை எழுப்பும் திறன் ரிப்பர் வாத்தில் மட்டும் கண்டுபிடிக்கவில்லை. முன்னதாக தனது தோட்டக்காரருக்கு “ஹலோ” என்று சொல்ல முயன்ற ஒரு ஆண் மஸ்க் வாத்தை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். வாத்துக்கள் மனிதர்களின் பேசும் வார்த்தைகளை ஒலியை கூர்ந்து கவனித்து அதனை அப்படியே பிரதிபலிக்கும் என்பதற்கு ரிப்பர் ஒரு எடுத்துக்காட்டு.