யாழில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றால் மரணம்!

யாழில் மேலும் 6 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரம் தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ். போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற சுழிபுரத்தைச் சேர்ந்த 50 வயதுடைய பெண் ஒருவரும், சாவகச்சேரியைச் சேர்ந்த 60 வயதுடைய பெண் ஒருவரும், காரைநகரைச் சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், யாழ். வேம்படியைச் சேர்ந்த 73 வயதுடைய ஆண் ஒருவரும், அரியாலையைச் சேர்ந்த 81 வயதுடைய ஆண் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்.

அத்தோடு தென்மராட்சி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மீசாலை மேற்கைச் சேர்ந்த 91 வயதுடைய பெண் ஒருவர் வீட்டில் உயிரிழந்த நிலையில் அவருக்கு கொரோனா தொற்றுள்ளதாக அறிக்கையிடப்பட்டுள்ளது.

இதன்மூலம் யாழ். மாவட்டத்தில் கொரோனா நோயினால் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317ஆக உயர்வடைந்துள்ளது.