இலங்கையில் க.பொ.த சாதாரணதர மற்றும் உயர்தர பரீட்சைகளை திட்டமிட்ட வகையில் நடத்துவதில் சந்தேகம் எழுந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நாட்டில் நிலவி வரும் கோவிட் தொற்று நிலைமை காரணமாகவே இவ்வாறான சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் உயர் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளதாக மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
இது தொடர்பில் மேலும், க.பொ.த சாதாரண மற்றும் உயர் தர பரீட்சைகள், புலமைப்பரிசில் பரீட்சை என்பவற்றை நடத்துவதற்கான திகதிகள் ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இருப்பினும் தற்போது நாட்டில் காணப்படும் கோவிட் நிலைமை காரணமாக பரீட்சைகளை ஒத்திவைப்பதற்கான நிலைமை ஏற்பட்டுள்ளதாக குறித்த அதிகாரி கூறியுள்ளதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதேவேளை கோவிட் தொற்று காரணமாக ஒத்திவைக்கப்பட்ட க.பொ.த உயர்தர, க.பொ.த சாதாரணதர மற்றும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சைகளை நடத்துவதற்காக தற்காலிகமாக முன்மொழியப்பட்ட திகதிகளை கல்வி அமைச்சு அண்மையில் வெளியிட்டிருந்தது.
அதன்படி தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை 2021 நவம்பர் 14ஆம் திகதியும், க.பொ.த உயர்தர பரீட்சை 2021 நவம்பர் 15 முதல் டிசம்பர் 10ஆம் திகதி வரையும், க.பொ.த சாதாரணதர பரீட்சை 2022 பிப்ரவரி 21 முதல் மார்ச் 3ஆம் திகதி வரையும் திகதிகள் முன்மொழியப்பட்டிருந்தன.
என்ற போதும் இவை தற்போது முன்மொழியப்பட்ட தற்காலிக திகதிகளே, நாட்டு சூழ்நிலைகளை பரிசீலித்த பின்னர் இது மாறலாம் என கல்வி அமைச்சு அறிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.