நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளியான முக்கிய தகவல்

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கினை எதிர்வரும் 13ஆம் திகதிக்கு பின் தொடராதிருப்பது குறித்து ஆராயப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது.

கோவிட் தொற்று பரவல் காரணமாக கடந்த 20ஆம் திகதி முதல் இலங்கையில் தனிமைப்படுத்தல் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்த நிலையில் தொடர்ச்சியாக ஊரடங்கு நீடிக்கப்பட்டு எதிர்வரும் 13ஆம் திகதி வரை ஊரடங்கானது அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்திலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் 13ஆம் திகதியுடன் முடிவுறுத்த அரசு ஆராய்ந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாட்டில் தற்போதைய பொருளாதார நிலையை கருத்தில் கொண்டு அமுலிலுள்ள ஊரடங்கு சட்டத்தை தளர்த்தி அத்தியாவசிய சேவைகள் உட்பட்ட முக்கியமான சேவைகளை சுகாதார கட்டுப்பாடுகளுடன் மேற்கொள்ள அனுமதியளிப்பது குறித்து கவனம் செலுத்தப்படுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து கடுமையான பாதுகாப்பு கட்டுப்பாடுகளுடன் பாடசாலைகளை திறப்பது குறித்தும் கவனம் செலுத்தப்படலாம் என குறித்த செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

என்ற போதும் வெள்ளிக்கிழமைகளில் ஜனாதிபதி தலைமையில் கூடும் கோவிட் ஒழிப்பு செயலணியானது தனிமைப்படுத்தல் ஊரடங்கு குறித்து முடிவினை எடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.