இன்று உச்சம் கொடுக்கும் சூரியன் – வளிமண்டலவியல் திணைக்களம் மக்களுக்கு எச்சரிக்கை!

சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களிலும் சில இடங்களில் குறிப்பாக மாலையில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

சூரியனின் தொடர்பான தென்திசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இவ் வருடம் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதியிலிருந்து செப்டம்பர் மாதம் 7ஆம் திகதி வரை இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது.

இன்று தெவுந்தர பிரதேசத்துக்கு மேலாக நண்பகல் 12.08 அளவில் சூரியன் உச்சம் கொடுக்கவுள்ளது.

நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசக்கூடும். காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரை காணப்படும்.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளிலும் புத்தளத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசந்துறை ஊடாக திருகோணமலை வரையான கடற்பரப்புகளிலும்காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

புத்தளத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

காலியிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளும் புத்தளத்திலிருந்து மன்னார் வரையான கடற்பரப்புகளும் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் கடற்பகுதிகளில் அவ்வப்போது பலமான காற்று வீசுவதுடன் அக்கடற்பிரதேசங்கள்மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும்.