நுவரெலியா மாவட்டத்தில் ஆறுமாதம் சிசுவை மண்ணில் புதைத்த இளம் தாய்!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கெலேகால, லோவர் கிப்ஸன் வீதியில் உள்ள வீடொன்றுக்கு அருகில் புதைக்கப்பட்டிருந்த சிசுவின் சடலமொன்று, இன்று தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி லுசாகாகுமாரி தர்மகீர்த்தியின் உத்தரவுக்கு அமைய, நுவரெலியா பொலிஸாரால் நீதிபதி முன்னிலையில் சிசுவின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

ஆறுமாதம் குறை பிரசுவத்தில் பிறந்த சிசுவே, இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

கெலேகால, லோவர் கிப்ஸன் பகுதியில் குடும்பத்துடன் வசித்த 25 வயதுடைய திருமணம் முடிக்காத யுவதி ஒருவரே ஆறு மாத கர்பிணியாகியுள்ள நிலையில்,வீட்டாரின் நிர்ப்பந்தத்தில் கருக்கலைப்பு மருந்தை உட்கொண்ட யுவதி வீட்டிலேயே குறை மாதத்தில் சிசுவை பிரசவித்துள்ளார்.

இவ்வாறு பிரசவித்த குழந்தையை வீட்டுக்கு அருகில் உள்ள மின்கம்பம் ஒன்றுக்கு அருகில் புதைத்துள்ளனர்.

அதே நேரத்தில் சிசுவை பிரசவித்த தாய்க்கு இரத்த போக்கு அதிகரித்து பாதிக்கப்பட்ட நிலையில் அவரை நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

இதன்போது குறித்த யுவதி தான் குறைமாதத்தில் சிசு ஒன்றை பிரசவித்து சிசு இறந்த நிலையில் அதை வீட்டார் புதைத்த சம்பவத்தை தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, வைத்தியர்கள் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை பொலிஸாருக்கு முறையிட்டுள்ளதுடன், யுவதியின் வாக்குமூலத்தை பெற்று இது விடயமாக நுவரெலியா நீதிமன்றத்தின் கவனத்துக்கு கொண்டுவந்துள்ளனர்.

இதையடுத்து, சிசு புதைக்கப்பட்ட இடத்தை அடையாளம் கண்டு இரத்த கறையுடன் துணி ஒன்றில் சுற்றி புதைக்கப்பட்ட நிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.

இதையடுத்து சடலம் பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நீதவான் பொலிஸாருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்செய்ய நுவரெலியா பொலிஸாருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.