இலங்கை சந்தையில் விற்பனையாகும் ஆபத்தான எரிவாயு சிலிண்டர்கள் ! வெளியான தகவல்

இலங்கையில் தற்போது விற்பனையாகும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் தரமற்றவை என்பதனால் நுகர்வோர் பாரிய ஆபத்து ஏற்படும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் புரோபேன் ஆகிய இரண்டு கூறுகளும் முறையே 80 சதவீதம் மற்றும் 20 சதவிகிதம் இருக்க வேண்டும் எனினும் சந்தையில் உள்ள சிலிண்டர்களில் இந்த இரண்டு கூறுகளும் தலா 50 சதவீதம் உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தின் பின்னர் இலங்கை சந்தையில் உள்ள இரண்டு வகை கேஸ் சிலிண்டர்களும் தரமற்றவை என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனை வீட்டினுள் பயன்படுத்துவதனால் ஆபத்துக்கள் அதிகமாகும். அவை வெடிக்கும் ஆபத்துக்கள் அதிகமாக உள்ளதென கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பியூட்டேன் மற்றும் புரோபேனின் அளவுகளை மாற்றினால் நிறுவனத்திற்கு அதிக இலாபம் கிடைக்கும் என்ற நோக்கத்தில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நுகர்வோர் விவகார ஆணையத்தின் ஒப்புதல் இல்லாமல் செய்யப்படும் இந்த மாற்றத்தை உடனடியாக சரிசெய்ய சட்ட திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என நுகர்வோர் விவகார ஆணையம் தெரிவித்துள்ளது.

பியூட்டேன் மற்றும் புரோபேன் என்பது இரண்டு வகையான திரவ பெட்ரோலிய வாயுக்களாகும். ஒரு வெப்பமண்டல நாட்டில் இருக்க வேண்டிய எல்பி வாயுவின் சதவீதத்தைப் பொறுத்து அதன் கலவை மற்றும் கொதிநிலை மாறுபடும். ஏப்ரல் மாதம் வரை விற்பனை செய்யப்பட்ட கேஸ் சிலிண்டர்களில் பியூட்டேன் மற்றும் புரோபேன் ஆகிய இரண்டு கூறுகளும் முறையே 80 சதவீதம் மற்றும் 20 சதவிகிதம் காணப்பட்டுள்ளது.

இந்த விகிதம் இலங்கை போன்ற வெப்பமண்டல நாட்டில் நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய அளவிலும் ஆற்றல் செயல்திறனும் அதிகமாக உள்ளது. எனினும் லிட்ரோ மற்றும் லாப் கேஸ் நிறுவனங்கள் சிலிண்டர்களில் காணப்பட வேண்டிய கூறுகளை தலா 50 சதவீதம் என மாற்றியுள்ளனர்.

பொதுவாக தொழிற்சாலை நடவடிக்கைகளுக்கும் வீட்டு பயன்பாடுகள் அற்ற நடவடிக்கைகளுக்குமே புரோபேன் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றது. வெப்பமண்டல நாடுகளில் புரோபேன் அதிகமாக பயன்படுத்தினால் ஆபத்தான நிலைமை ஏற்படும். எப்படியிருப்பினும் நுகர்வோர் விவகார அதிகாரசபையின் நிறைவேற்றுப் பணிப்பாளர் துஷான் குணவர்தன, இந்த நிலைமை குறித்து கவனம் செலுத்தியுள்ளார்.

எல்.பி. தரநிலை அமைப்பு இது தொடர்பான விதிகளை ஒழுங்குபடுத்த வேண்டும். நுகர்வோருக்கு ஏற்படக்கூடிய ஆபத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Source : Tamil Win