இருப்பவர்கள் இறந்தது போல் கனவு வந்தால், இதெல்லாம் நடக்குமா? கனவு பலன் தெரிந்து கொள்ளுங்கள்

பொதுவாக அனைவருக்கும் கனவுகள் வருவது இயல்பான ஒரு விஷயமே.. ஆனால் தினமும் கனவுகள் வருவதில்லையே?? சில கனவுகள் சில விஷயங்களை நினைவுப்படுத்தும். சில கனவுகள் அச்சுறுத்தும் வகையாகவும் இருக்கும். கனவுகள் வருவது சாதாரண விஷயமாக இருந்தாலும், இதில் முக்கியமாக கவனிக்கக்கூடிய ஒரு விஷயம் என்னவென்றால் இந்த கனவு நீங்கள் கண்விழித்த பின்னரும் நினைவில் இருக்கிறது என்பதை கவனியுங்கள். அப்படி நினைவில் இருக்கும் கனவுகளுக்கு சில பலன்களும் உண்டு. இவையாவும் பொதுபலன்களே. ஆனால் சில கனவுகள் விழித்த பின்னர் மறந்தே போய்விடும். ஏதோ கனவு கண்டோம்.. ஆனால் என்ன கனவு என்பதே ஞாபகம் இருக்காது!! அத்தகைய கனவுகளைப் பற்றி யோசிப்பது தேவையற்றது. என்ன மாதிரியான கனவு கண்டால் என்ன பலன் கிடைக்கும்? என்பதை பற்றி சில தகவல்களை இப்பதிவில் காணலாம்.

உங்கள் கனவில் தண்ணீரை காண்பது நல்ல பலன் தரும். நீங்கள் நினைத்திருக்கும் நிஜகனவுகள் விரைவில் பலிக்கும் என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது எனக்கொள்ளலாம். நீங்கள் தண்ணீரை கனவில் குடிப்பது போலவோ, யாருக்கேனும் தண்ணீர் கொடுப்பது போலவோ, இப்படி எந்த வகையில் தண்ணீரை கண்டாலும் நீங்கள் மனதில் வைத்திருக்கும் ஆசைகள் கட்டாயம் பலிக்கும்.

உங்கள் கனவில் திருநீறு வந்தால் சுபப் பலன்கள் கிட்டும். ஈசனின் அடையாளம் திருநீறு. திருநீறு பூசுவது போலவோ, எடுப்பது போலவும் எந்த வகையில் திருநீறு உங்கள் கனவில் வந்தாலும் எதிர்பாராத மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் நிகழும் என்பதை குறிப்பிட்டு கூறுகிறது. அந்த மாற்றங்கள் உங்கள் வாழ்க்கையில் சுபகாரியங்கள் ஏற்பட காரணமாக இருக்கும்.

உங்கள் கனவில் சமுத்திரத்தை கண்டால், உங்களுக்கு மன அமைதி தேவைப்படுகிறது என்பதை குறிப்பிட்டு காட்டுகிறது. உங்கள் மனதை ஏதோ ஒரு சம்பவம் பாதித்து உள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது. உங்களுடைய ஆழ்மனதிற்கு அமைதி தேவைப்படுகிறது. தியானம், யோகா போன்றவற்றை தினமும் ஐந்து நிமிடமாவது செய்வது நல்ல பலன் தரும்.

நாகம் தீண்டுவது போல் உங்களது கனவில் வந்தால், அந்த நாகம் ராஜநாகமாக இருந்தால், நீங்கள் பயந்து எழுவீர்கள். எழுந்த பின்னரும் அந்த கனவு உங்களை பீடித்திருக்கும். இதனால் பயப்பட தேவை இல்லை. ராஜநாகம் தீண்டுவது உங்களுக்கு இருக்கும் பொறுப்புகள் குறையும் என்பதை குறிக்கிறது. உங்கள் பாரம் தீரும் என்பதை சுட்டிக்காட்டுகிறது.

உங்கள் கனவில் மாடு கன்று ஈனுவது போல் வந்தால் நல்ல பலன் தரும். வெற்றி கிட்டும் என்பதைக் குறிக்கிறது. நீங்கள் தொடங்கவிருக்கும் புதிய முயற்சிகள் அனைத்தும் தடையின்றி வெற்றி பெறும் என்பதை கனவு உணர்த்துகிறது. செய்ய இருக்கும் செயல்கள் எப்படி நிறைவேற போகிறதோ என்ற பயம் கொண்டிருப்பீர்கள். அதனால் இது போன்ற கனவு வந்திருக்கலாம்.

கனவில் மாமிசம் சாப்பிடுவது போல் வந்தால், ஆரோக்கிய குறைபாடு ஏற்படுவதை குறிக்கிறது. எனவே மாமிசம் கனவில் கண்டால் ஆரோக்கிய விஷயத்தில் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. உடல்நலனுக்கு தீங்கான உணவுகளை தவிர்த்துவிடுவது நல்லது.

நீங்கள் குளிப்பது போல் கனவு கண்டால் மனதில் இருக்கும் கவலைகள் அனைத்தும் விரைவில் நீங்கும் என்பதை இந்த கனவு குறிப்பிட்டுக் கூறுகிறது.

நீங்கள் தற்கொலை செய்து கொள்வதை போல் கனவு கண்டால் இந்த கனவில் இருந்து விழித்த பின்னரும் அச்சுறுத்துவதாக இருக்கும். ஆனால் இதைப்பற்றிய பயம் கொள்ள தேவையில்லை என்பதே உண்மை. இது நல்ல பலனை தான் தரும். தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் உண்மையில் இருந்தாலும் அதை இந்த கனவு நீக்கிவிடும். உங்கள் பிரச்சினைகள் விரைவில் தீரும் என்பது இந்த கனவு உணர்த்துகிறது.

உயிரோடு இருக்கும் ஒரு நபர் உங்கள் கனவில் இறந்தது போல் வந்தால், அந்த கனவு விழித்த பின்னரும் உங்கள் நினைவில் அப்படியே இருந்தால், நீங்கள் பயப்படும்படி ஒன்றும் நேர்ந்து விடப்போவதில்லை. கனவில் கண்ட நபரிடம் உங்களுக்கு இதுவரை இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும் என்பதை தான் இந்த கனவு குறிப்பிட்டுக் கூறுகிறது எனக் கொள்ளுங்கள். எந்த ஒரு கனவும் அச்சுறுத்துவதற்காக வருவதில்லை. முன்கூட்டியே எச்சரிக்கை செய்வதற்கு தான் வருகிறது. விழித்து எழுந்த பின்னரும் கனவுகள் தொடர்ந்து நினைவில் நிற்கிறது என்பது எதையோ உங்களுக்கு உணர்த்துகிறது என அர்த்தமாகிறது. அது நல்லதை செய்யவே இருக்கும். இதனால் பயம் தேவையில்லை. உங்களுக்கு அச்சமாக இருக்கும் பட்சத்தில் இறந்து போனதாக கனவில் கண்ட நபரிடம் இதைப் பற்றி தாராளமாக பேசலாம். அவர்கள் எச்சரிக்கையாக இருப்பார்கள் அவ்வளவுதான். வருவதை எதிர்கொள்ள மன தைரியத்துடன் இருக்க வேண்டுமே தவிர அதைப்பற்றிய பயத்தை வளர்த்து கொள்வது நல்லதல்ல. பயமே உங்கள் பலவீனம் என்பதை மறந்து விடாதீர்கள்.