12 வயது சிறுமிக்கு கொரோனா தடுப்பூசி வழங்கியவர் திடீர் இடமாற்றம்!

சுகாதார அமைச்சின் அனுமதியின்றி 12  வயது சிறுமிக்கு கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்ட சம்பவம் தொடர்பில், சிலாபத்தில் கடமையாற்றிய கொரோனாத் தடுப்பூசி மையத்தின் பொறுப்பாளரான மருத்துவர் மற்றும் ஒரு குடும்ப சுகாதார அலுவலர் ஆகியோர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

சிலாபம் – கொக்கவில் ஆரம்பப் பாடசாலையில் உள்ள தடுப்பூசி மையத்தின் மருத்துவர் மற்றும் குடும்ப சுகாதார அலுவலர் ஆகியோரே, சிலாபம் அடிப்படை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக புத்தளம் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர், வைத்தியர் தினுஷ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

கொரோனாத் தடுப்பூசி, வழங்கப்பட்ட பிள்ளை, சம்பந்தப்பட்ட மருத்துவரின் பிள்ளை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து இன்று விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும்,விசாரணையின் முடிவில் இரண்டு அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் புத்தளம் சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளர், வைத்தியர் தினுஷ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.