வவுனியாவில் 244 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன் மூவர் மரணம்!

வவுனியாவில் 244 பேருக்கு கோவிட் தொற்று ஏற்பட்டுள்ளதுடன், மூவர் மரணமடைந்துள்ளதாக சுகாதாரப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

வவுனியாவில் இனங்காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களுடன் தொடர்புகளைப் பேணியோர், வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டோர் மற்றும் எழுமாறாக மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனையின் முடிவுகள் சில இன்று இரவு வெளியாகின.

அதில் வவுனியா, வவுனியா வடக்கு, செட்டிகுளம், வவுனியா தெற்கு ஆகிய பிரிவுகளை உள்ளடக்கியதாக மாவட்டம் முழுவதும் கோவிட் தொற்று பரவல் அடைந்துள்ள நிலையில் 244 பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் தொற்றாளர்களை கோவிட் சிகிச்சை நிலையத்திற்கு அனுப்பி வைப்பதற்கும் அவர்களுடன் தொடர்புடையவர்களை தனிமைப்படுத்துவதற்கும் சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

மேலும், செட்டிகுளம் பகுதியில் இருந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 6 மாத குழந்தை சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

அத்துடன், வவுனியா, கற்குழி பகுதியில் வசிக்கும் 76 வயது நபர் ஒருவர் வீட்டில் மரணமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டிருந்தார். அவரிடம் மேற்கொண்ட பிசீஆர் பரிசோதனையில் கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவற்றுடன், வவுனியா வைத்தியசாலையில் சுகவீனம் காரணமாக அனுமதிக்கப்பட்ட 86 வயதுடைய சமயபுரம் பகுதியைச் சேர்ந்த நபரொருவர் சிகிச்சை பலனின்றி மரணமடைந்துள்ளார்.

இந்நிலையில் மரணித்த மூவரது உடல்களையும் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி தகனம் செய்ய சுகாதாரப் பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.