‘சூப்பர் வேரியன்ட்’ என்கிற அதிவேகமாக பரவும் திரிபு இலங்கையில் பரவும் அபாயம்!

பிரித்தானிய வைத்திய நிபுணர்கள் எச்சரிக்கின்ற கொரோனா தொற்றின் சூப்பர் வேரியன்ட் என்கிற அதிவேகமாக பரவும் திரிபு, ஸ்ரீலங்காவிலும் பரவலாம் என எச்சரிக்கப்படுகின்ற நிலையில், அதனைத் தடுப்பதற்கான முயற்சிகளை தீவிரப்படுத்துவது பற்றி ஸ்ரீலங்கா அரசாங்கம் கவனம் செலுத்திவருகின்றது.

அதிதீவிரமாகப் பரவும் புதிய பிறழ்வுகள் வந்தாலும் அச்சமடையாமல், தொற்றுப் பரவாமல் தடுப்பதற்கான முயற்சிகள் எடுக்கப்படும் என்று அரசாங்கத்தின் இணைப் பேச்சாளரான வைத்தியர் ரமேஷ் பத்திரண தெரிவித்தார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற அமைச்சரவையின் வாராந்த தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின்போது அவர் இந்த விடயத்தை தெரிவித்துள்ளார். இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

உண்மையிலேயே வைத்தியத்துறை இந்த பிறழ்வுகள் பற்றி தொடர் ஆய்வுகளை நடத்திவருகின்றது.

பிரதான விடயங்களான பாதுகாப்பு என்ற விடயத்தில் தடுப்பூசி டோஸ் இரண்டையும் பெற்றவர்கள் எவ்வகையிலான தொற்றுப் பிறழ்வுகள் ஏற்பட்டாலும் மரணம் வரை செல்வது குறைவாகும் என்பது உலக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்காவிலும் இப்படியான தொற்றுப் பிறழ்வுகள் பல சந்தர்ப்பங்களிலும் ஏற்படலாம். இருந்தாலும் தடுப்பூசி வழங்கலின் ஊடாக நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கின்றது.

சரீரத்திற்குள் ஏற்படுகின்ற இயற்கையான நோயெதிர்ப்பு நிலைமை, உலக நாடுகளிலும் குறிப்பாக ஸ்ரீலங்காவிலும் இப்படியான நிலைமை உள்ளது.

நோயெதிர்ப்பு சக்தி உடலில் ஏற்படுவதன் ஊடாகவே இவ்வகையான தொற்றுக்களிலிருந்து உயிர்பிழைக்கின்ற நிலைமை உருவாகின்றது.

ஆகவே அனைவரும் தடுப்பூசி மீது அதிக கவனம் செலுத்த வேண்டும். எவ்வாறாயினும் நோயெதிர்ப்பு சக்தி பற்றி எமக்கும் அதேபோல உலக நாடுகளிலும் பல்வேறு அனுபவங்கள் ஏற்பட்டுள்ளன.

அதனால் தொடர்ந்தும் இந்த தொற்றுக்கு அச்சமடைந்து வாழமுடியாது. இந்தத் தொற்றிற்கு எதிராக செயற்பட்டு வாழப்பழகிக் கொள்ள வேண்டும் என்கின்ற கொள்கையில்தான் இன்றைய நாடுகள் செயற்படுகின்றன என்றார்.