யாழ் வைத்தியசாலையில் உயிரிழந்த இளைஞன் ! வெளியான கொரோனா முடிவு உறவினர்கள் களேபரம்

குருநகரில் வாள்வெட்டு தாக்குதலில் உயிரிழந்த இளைஞனிற்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் அறிவித்துள்ள நிலையில், இளைஞனின் உறவினர்கள் வைத்தியசாலையில் கூடியதால் அங்கு பாதுகாப்பு பணியில் பொலிசாரும், இராணுவத்தினரும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 22ஆம் திகதி குருநகர், சுகவாழ்வு சிகிச்சை நிலையத்திற்கு அண்மையில் இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் 5 இளைஞர்கள் காயமடைந்த நிலையில் யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அதில் படுகாயமடைந்த எட்மண்ட் ஜெரன் (24) என்ற இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்தார்.

இதனையடுத்து அவரது சடலத்தின் மாதிரிகளில் மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக, வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

எனினும், கடந்த 22ஆம் திகதி அந்த இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் சோதனையில், இளைஞனிற்கு எதிர்மறையான முடிவு கிடைத்ததாக தெரிவித்து, உயிரிழந்தவரின் உறவினர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக அங்கு பாதுகாப்பு பணியில் பொலிசாரும், இராணுவத்தினரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.