இந்த கிழமையில் பிறந்தவர்கள் அள்ளிக் கொடுப்பதில் வல்லவர்களாம்..!

இந்த உலகில் பிறந்த ஒவ்வொருவரும் ஏதேனும் ஒரு கிழமையில் பிறந்திருக்க வேண்டும். அந்தக் கிழமை எப்படிப்பட்ட கிழமை, அதனால் நம் நிலைமை எப்படி உயரும் என்று முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். பொதுவாக வள்ளல் தன்மையோடு, பிறருக்கும் உதவும் குணத்தை வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் பெற்றிருப்பது இயல்பு.

காரணம் ஒரு மனிதன் உதவுவதற்கு முதலில் மனம் வேண்டும், அடுத்ததாக பணம் வேண்டும். இந்த இரண்டையும் இணைந்து பெற்றவர்கள் இவர்கள் தான். வெள்ளிக்கிழமையை ‘சுக்ர வாரம்’ என்று சொல்வார்கள். கிரகங்களில் நல்ல வசதி வாய்ப்புகளை வழங்கும் கிரகம் சுக்ரன் ஆவார். சுக்ரனுக்குரிய கிழமை வெள்ளிக்கிழமை.

எனவே வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் அசுரகுருவின் அருளைப் பெற்றவர்கள்.மேலும் இவர்களது ஜாதகத்தில் சுக்ரன் உச்சம் பெற்றிருந்தால் செல்வம் இவர்கள் இல்லத்திலேயே நிலையாகத் தங்கிவிடும்.

பொதுவாக ஒருவர் நல்ல வசதியுடன், சுகபோக வாழ்க்கை வாழ்ந்தால் ‘அவருக்கென்ன சுக்ர திசை நடக்கிறது’ என்று ஜாதகத்தைப் பார்க்காமலேயே யூகித்துச்சொல்வது வழக்கம். அந்த அளவிற்கு இந்த சுக்ரன் செல்வச் செழிப்பை வழங்கும் கிரகமாகும். ‘லட்சுமி கடைக்கண் பார்த்தால் போதும்’ அதிர்ஷ்டம் அடியெடுத்து வைத்து விடும் என்பார்கள். அந்த லட்சுமி கடைக்கண் பார்ப்பதற்கு இந்த சுக்ரன் தான் காரணம்.

மிகப்பெரிய செல்வந்தர்களுக்கு எல்லாம், கேட்டவுடன் இல்லையென்று சொல்லாமல் அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மை பெற்றவர்களுக்கு எல்லாம் சுக்ரன் மிக நல்ல நிலையில் இருக்கும் என்று உறுதியாகக் கூறமுடியும். இந்தச் சுக்ரனின் அருள் நமக்குக் கிடைக்க வெள்ளிக் கிழமை அன்று சாந்தரூப அம்பிகைகளை நாம் வணங்க வேண்டும். அப்பொழுதுதான் இன்பங்கள் இல்லத்தில் அடியெடுத்து வைக்க வழிபிறக்கும்.

அப்படிப்பட்ட சுக்ரனுக்குரிய வெள்ளிக்கிழமையில் பிறந்தவர்கள் ஆன்மிக நாட்டம் அதிகம் கொண்டவர்கள். தெய்வபலத்தால் தான் எங்களுக்கு செல்வ வளம் பெருகியது என்று சொல்வர். இவர்கள் கலைத்துறையில் ஈடுபாடு மிக்கவர்களாகவும், பிறர் மனதை எளிதில் கவரக்கூடிய பேச்சாற்றலையும் பெற்றிருப்பர். உடல்நலனில் அதிக அக் கறை எடுத்துக் கொள்வர். அறிவைக் காட்டிலும் அழகிற்கே முக்கியத்துவம் கொடுப்பர். பெரும்பாலானோர் எதாவது ஒரு கலையில் கைதேர்ந்தவர்களாகத் திகழ்வர்.

வெள்ளிக்கிழமையும் பிறந்த தேதியின் ஆதிக்கத்தையும் இணைத்துப் பார்க்கும் பொழுது ஒன்று எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்தவர்கள் மென்மையான உள்ளம் படைத்தவர்கள், பதவிக்கு ஆசைப்படாமல் உதவிக்கு ஆசைப்படுவர். அரசியல்வாதிகளின் அனுகூலம் எளிதாகக் கிடைக்கும். சிறந்த கலைஞர்களாகத் திகழ்வர். முப்பது வயதிற்கு மேல் வருமானம் பெருகும்.

இரண்டு எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்தவர்கள் கலகலப்பாக அனைவரிடமும் பேசும் ஆற்றலை பெற்றிருப்பர். அதிகம் படிக்காவிட்டாலும் அறிஞர் களின் பழக்கத்தாலும், அனுபவத்தாலும் அனைத்தையும் தெரிந்து வைத்திருப்பர். சில தொல்லைகள் உடலுக்கு வந்தாலும் அஞ்சி நடுங்குவர். முப்பத்தி நான்கு வயதிற்கு மேல் முன்னேற்றப் பாதையை நோக்கி அடியெடுத்து வைப்பர்.

மூன்று எண்ஆதிக்கமும்,வெள்ளிக்கிழமையும் அமைந்த வர்கள் பக்தி மார்க்கத்தில் அதிகம் மனதைச் செலுத்துவர். பறவையைப் போல சுதந்திரமாக வாழ வேண்டுமென்று நினைப்பர். வெளிநாட்டில் வாழும் யோகம் இவர்களுக்கு அதிகம் உண்டு. இவர்களுக்கு வரும் துயரங்கள் மின்னலைப்போல உடனே மறைந்து விடும். இருபத்து ஏழு வயதிற்கு மேல் யோகம் வரும்.

நான்கு எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்தவர்கள் யாரிடமும் ஆலாசனை கேட்பது பிடிக்காது, நேரத்தைப் பொன்னாக மதிப்பர். செய்யும் காரியங்கள் சீரோடும், சிறப்போடும் அமைய வேண்டும் என்று விரும்புபவர். எந்தெந்தக் காரியத்தை எப்பொழுது செய்ய வேண்டுமோ, அந்தச் சமயம் பார்த்துச் செய்து வெற்றி பெறுவர்.

ஐந்து எண் ஆதிக்கமும், வெள்ளிக் கிழமையும் அமைந்தவர்கள் பலர் செய்யும் வேலையை ஒருவரே முன்னின்று செய்து முடித்துவிடுவர். மனிதத் தேனீ என்று கூடச் சொல்லுமளவிற்கு மிகுந்த சுறுசுறுப்பு கொண்டவர்கள். சுயதொழில் இவர்களுக்கு அமையும். இளம் வயதிலேயே மிகுந்த முன்னேற்றத்தைக் காண்பர்.

ஆறு எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்தவர்கள், கலைத்துறையில் ஈடுபாடு அதிகம் கொண்டவர்கள். இவர்கள் கைநிறையக் குறுகிய காலத்திலேயே சம்பாதிப்பர். சமுதாயத்தில் அந்தஸ்து மிக்கவர்களாக விளங்குவர்.

ஏழு எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்தவர்கள் தனிமையில் இனிமை காண்பவர்களாக அமைவர். பிறருக்கு உதவிகள் செய்வதைக் குறிக்கோளாகக் கொள்வர். நிலையான தொழில் இவர்களுக்கு அமைவது அரிது. உத்தியோகத்திலும் ஒவ்வொன்றாக மாறிக்கொண்டேயிருப்பர்.

எட்டு எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்த வர்கள் புத்திக்கூர்மை மிக்கவர்களாக விளங்குவர். பிறர் வியக்குமளவிற்கு பணிபுரிவர்.கைத்தொழிலையும் கற்றுவைத்திருந்து கைநிறைய சம்பாதிப்பர். இளம் வயதிலேயே இமயம்போல் உயர்வர்.

ஒன்பது எண் ஆதிக்கமும், வெள்ளிக்கிழமையும் அமைந்தவர்கள் தீட்டிய திட்டங்கள் மனதளவில் மட்டுமே இருக்கும். உடன்பிறப்புகளால் முன்னேற்றம் காண்பர். வாழ்வில் வசதி வாய்ப்புகள் பெருகும். பதவிகளும், பட்டங்களும் வந்து சேரும்.

பொதுவாக வெள்ளிக்கிழமை பிறந்தவர்கள் செல்வாக்கு மிக்கவர்கள். செல்வச் செழிப்பும் பெற்றவர்கள். அடுத்தவர்களுக்கு அள்ளிக் கொடுக்கும் வள்ளல் தன்மையும் பெற்றிருப்பதால் தான் வையகத்தில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துக்கொள்கின்றனர்