வீட்டில் தீராத பண கஷ்டமா? பூசை அறையில் இதை வைத்து பூஜை செய்யுங்க.!

வீட்டில் தீராத பண கஷ்டம் இருந்து வருகிறது. வறுமை வாட்டி வதைக்கின்றது என்றால், வீட்டில் மகாலட்சுமி ஸ்வரூபமாக வசிக்கும் பெண்கள், வாரம் தோறும் வரும் வெள்ளிக்கிழமைகளில், மகாலட்சுமியை நினைத்து மனநிறைவோடு பூஜை அறையில் பூஜை செய்ய வேண்டும். தொடர்ந்து வெள்ளிக்கிழமையில் மனநிறைவோடு, சந்தோஷத்தோடு எந்த வீட்டில், பெண்கள் பூஜை செய்கிறார்களோ அந்த வீட்டில் வறுமை நெருங்க முடியாது என்பது நிதர்சனமான உண்மை. சரி, நாளை அப்படி என்ன அதி அற்புதமான நாள் என்று பலரும் சிந்திக்கலாம்.

வழக்கம்போல வரக்கூடிய வெள்ளிக்கிழமையாக இருந்தாலும், தை மாதத்தில் வரக்கூடிய வெள்ளிக்கிழமை என்பது கொஞ்சம் சிறப்பானது. கடந்த வாரம் ஒரு வெள்ளிக்கிழமை முடிந்தது. அடுத்து வரக்கூடிய மூன்று வெள்ளிக்கிழமைகளில் தொடர்ந்து வீட்டில் இருக்கும் பெண்கள் இந்த பரிகாரத்தை செய்தால், வீட்டில் இருக்கும் வறுமை நிச்சயம் நீங்கும்.

வீட்டில் இருக்கக்கூடிய ஆண்களுக்கு வருமானம் அதிகரிக்க தொடங்கும். சொந்தத் தொழில் பிரச்சனை, அலுவலகத்தில் பிரச்சனை, வீட்டில் இருக்கும் ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி, வரக்கூடிய வருமானத்தில் தடை ஏற்பட்டுக் கொண்டே இருக்கின்றது என்றால், முழு மனதோடு உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள்.

வெள்ளிக்கிழமை என்றாலே நம்முடைய வீடு சுத்தபத்தமாக இருக்கும். நம் வீட்டு பூஜை அறையும் சுத்தமாக இருக்கும். பூஜை அறையில் உள்ள படங்களுக்கு பூக்களால் அலங்காரம் செய்து விடுங்கள். இந்த பரிகாரத்திற்க்கு ஒரு செம்பு பாத்திரம் கட்டாயம் தேவை. உங்களுடைய வீட்டில் பஞ்ச பாத்திரத்தை தவிர, வேறு செம்பு பாத்திரம் இல்லை என்றால், சுவாமிக்கு, வேறு ஒரு எச்சில் படாத பாத்திரத்தில் தண்ணீரை வைத்துவிட்டு, செம்பு பஞ்சபாத்திரத்தை இந்த பரிகாரத்திற்க்கு பயன்படுத்திக் கொள்ளலாம் தவறு கிடையாது.

செம்பு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முதலில் ஒரு கைப்பிடி உப்பு போட வேண்டும். இரண்டாவதாக ஒரு கைப்பிடி அளவு நாட்டுச்சர்க்கரை போட்டுவிடுங்கள். மூன்றாவதாக ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு விடுங்கள். பூஜை அறையிலேயே செம்பு பாத்திரத்தை வைத்து போட வேண்டும். இப்போது பச்சரிசிக்கு மேல் ஒரு ரூபாய் நாணயத்தை வைத்து, ஒரு ரூபாய் நாணயத்திற்கு சந்தனம் குங்குமம் பொட்டு வைத்து ஒரு புஷ்பத்தையும் வைத்து இந்த கலசத்தை அப்படியே மகாலட்சுமி முன்பு வைத்து விடுங்கள்.

இந்த சொம்பு நிறைவாக தான் இருக்க வேண்டும், உள்ளே உள்ள பொருட்களை நிறைய கொட்ட வேண்டும் என்ற எந்த அவசியமும் கிடையாது. பஞ்ச பாத்திரத்தை எடுத்துக்கொண்டு, 1 ஸ்பூன் அளவு, 3 பொருட்களை சேர்த்தால் கூட தவறு இல்லை. இந்த செம்பு பாத்திரம், இந்த வெள்ளிக்கிழமையிலிருந்து அடுத்து வரக்கூடிய வியாழக்கிழமை வரை அப்படியே பூஜை அறையில் இருக்கட்டும்.

வியாழக்கிழமை இந்த பொருட்களை எல்லாம் எடுத்து காக்கை குருவிகளுக்கு சாப்பிட போட்டுவிட்டு, அந்த பாத்திரத்தை சுத்தம் செய்து, மீண்டும் வெள்ளிக்கிழமை, இந்த பொருட்களை நிரப்பி வைத்து, மகாலட்சுமி முன்பு சமர்ப்பணம் செய்து விடுங்கள். உப்பு, இனிப்பு பொருள், பச்சரிசி மூன்றும் ஒன்றாக சேரும் போது, வீட்டில் சாப்பாட்டிற்கு, பணத்திற்கு, சந்தோஷத்திற்கு பஞ்சம் வராது. மனதார மகாலட்சுமியிடம் வேண்டுதலை வைத்தால், அந்த வேண்டுதல் உடனே பலிக்க இந்த வழிபாடு உங்களுக்கு துணையாக நிற்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்ளலாம்.-