ஊரடங்கை நீடிக்கும் முடிவு தொடர்பில் வெளியான தகவல்கள் !

நாடு முடக்கப்பட்டுள்ள சந்தர்ப்பத்தில் பொது மக்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பதன் அடிப்படையிலேயே தனிமைப்படுத்தல் ஊரடங்கை நீடிப்பதா என்பது தொடர்பில் தீர்மானிக்கப்படும் என ஔடத உற்பத்திகள், வழங்குகைகள் மற்றும் ஒழுங்குறுத்துகை இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் நாளை முதலான எதிர்வரும் வாரமானது, 60 வயதிற்கு மேற்பட்ட தடுப்பூசி போடாதவர்களுக்கான விசேட தடுப்பூசி வாரமாக அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

60 வயதிற்கு மேற்பட்ட பலர் தனிப்பட்ட காரணங்கள் மற்றும் பல தவறான கருத்துக்களால் தடுப்பூசி போடுவதை தவிர்த்து வருகின்றனர்.

கோவிட் தொற்றால் இறப்பவர்களின் எண்ணிக்கை கணிசமான அளவு உயர்வதற்கு இதுவே காரணம். கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் அதிளவானோர் கோவிட் தடுப்பூசி பெற்றுக் கொள்ளாத 60 வயதிற்கு மேற்பட்டவர்களாவர்.

இந்த நிலையில் எதிர்வரும் வாரம் 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கான முக்கிய வாரமாக காணப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், முதியவர்களை பராமரிப்பவர்கள், தாமதமின்றி அவர்களை எதிர்வரும் வாரத்தில் தடுப்பூசி போட ஊக்குவிக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.