ராமாயணம் உண்மையா ? ஆதாரத்தோடு விளக்கம்

ராமாயணம் நிஜமாகவே நடந்ததா அல்லது வால்மீகி என்ற இதிகாச ஆசிரியரின் கனவா என்ற இரண்டு வகையான கேள்விகளுக்கும் உறுதியான இறுதியான பதிலை எந்த ஆராய்ச்சியாளனும் இதுவரை தரவில்லை. ராமாயணத்தை உண்மையாகவே நடந்த சம்பவங்களின் பதிவுகள் எனக் கருதுவோர் சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். ராமாயணம் என்பது வெறும் கற்பனைக் கதை என வாதிடுவோர்களும் சில ஆதாரங்களை முன் வைக்கிறார்கள். இதில் வேடிக்கை என்னவென்றால் உண்மையென்று காட்டுவதற்கு எந்த ஆதாரம் வைக்கப்படுகிறதோ அதே ஆதாரத்தை அடிப்படையாகக் கொண்டே கற்பனை என்ற வாதமும் வைக்கப்படுகிறது.

சிலர் வேறு விதமாக கூறுகிறார்கள். ராமாயணத்தை பொய் என்று எப்படி ஏற்றுக் கொள்ள முடியும். ராமன் வாழ்ந்ததாக கூறப்படும் அயோத்தியும் மற்றும் அதில் கூறப்பட்டுள்ள இலங்கை உள்ளிட்ட இதர பகுதிகளும் இன்றும் இருக்கின்றனவே அதை வைத்து பார்க்கும் பொழுது ராமாயணம் நடந்த வரலாறாகத்தான் தெரிகிறது என்கிறார்கள்

இதை மறுக்கும் ஒரு சாரார் மிக அற்புதமான உதாரணத்தை தருகிறார். இன்றைய நவீன நாவல்களில் கதைக்களமாக பல இடங்கள் காட்டப்படுகின்றன. உதாரணமாக ஒரு கதையின் நாயகன் சென்னையில் இருப்பதாகவும், வடபழனியில் பணி புரிவதாகவும், மெரினா பீச்சில் உலாவுவதாகவும் எழுதப்பட்டிருப்பதாக வைத்துக் கொள்வோம். சென்னை, வடபழனி, மெரினா பீச் ஆகியவைகள் உண்மையாகவே இருக்கிறது என்பதற்காக நாவலின் கதாபாத்திரத்தை நிஜமென்று ஏற்றுக் கொள்ள முடியுமா? அதே போன்றுதான் ராமாயணத்தின் நிலையும் ஆகும்.

சரி ராமாயணத்தை வரலாறு என்றே வைத்துக் கொள்வோம். அது நடந்ததாகவே இருக்கட்டும். ஆனால் அதில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் வரும் மாயாஜாலங்கள் மனிதர்களின் அதீத சக்திகள் வானரம், கரடி ஆகியவைகள் தூது சென்றன. யுத்தம் புரிந்தன பத்து தலையுடைய அரக்கன் இருந்தான். ராமன பனிராண்டாயிரம் வருடங்கள் அரசாட்சி செய்தான் என்பவைகள் எல்லாம் நம்பும்படியாகவா இருக்கிறது. எனவே கதையைக்கூட உண்மையென்று ஏற்றுக் கொண்டாலும் அதன் சம்பவங்களின் தன்மைகளை அறிவுக் கண்கொண்டு பார்க்கும் பொழுது உண்மையென்று நம்புவதற்கு துளிகூட ஆதாரம் இல்லையே என்றெல்லாம் கருத்துக்களை சொல்கிறார்கள்.

ராமாயணம் கற்பனையென்று கூறுபவர்களின் இத்தகைய எண்ணங்களையும், கேள்விகளையும் தவறுதலானது என்று யாரும் ஒதுக்கிவிட முடியாது. அதே நேரம் இவர்கள் இப்படி கூறுகிறார்கள் இவர்களின் கூற்றிலும் உண்மை இருக்குமோ என்று நம்பாமலும் ஐயப்பாடு கொள்ள முடியவில்லை. நானும், எனது பாட்டனுக்கு அப்பனும் காலம்காலமாக உண்மையென்று நம்பி வரும் ராமாயணத்தை பொய்யென்று ஏற்றுக்கொள்ள என் மனதிற்கு துணிச்சல் இல்லை. அதே நேரம் இல்லையென்று வாதிடுபவனின் வாயை அடைக்க என் கையில் எந்த ஆதாரமும் இல்லை. இத்தகைய தர்மசங்கடமான நிலையிலேயே பெருவாரியான மக்கள் இருக்கிறார்கள்.

அறிவியல் பூர்வமான ஆதாரங்களை நம்புகின்ற நாம் எடுத்துக் காட்டினாலும் நம்பாதவர்கள் அதை ஒரு நொடியில் சுலபமாக மறுத்து விடுகிறார்கள். அது மட்டுமல்ல நம் ஆதாரம் உண்மைத் தன்மை உள்ளது அல்ல என்பதைப்பல சமயங்களில் நிரூபித்தும் விடுகிறார்கள்.

உதாரணமாக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா செயற்கை கோள் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு அதில் உள்ளது ராமர் கடலைக்கடந்து இலங்ûக்குச் செல்ல கட்டிய பாலம் இதுதான் என்று கூறினார்கள். ஆகா நல்ல ஆதாரம் நமக்கு கிடைத்து விட்டதே என்று மகிழ்ச்சி அடைந்த சில நாட்களிலேயே நாசா காட்டியது ராமர் பாலம் அல்ல கடலுக்குள் இயற்கையாக ஏற்படும் மணல் திட்டுகள்தான். இதே போன்ற மணல் திட்டுகள் உலக கடல் பரப்பளவு முழுவதிலும் ஐந்து இடங்களில் உள்ளன. எனவே இந்த புகைப்படம் இந்தியாவில் மதப்பிரச்சினைகளை உருவாக்க அமெரிக்கா தீட்டிய சதி திட்டமே ஆகும். என்று ஒரு சாரார் வாதிடுகிறார்கள்.

இதில் எதை நம்புவது நாசாக் கூறுவது உண்மையென்றால் அது மகிழ்ச்சிதான். ஆனால் நாசா அமெரிக்க நிறுவனமாகும். அமெரிக்கா தனது நவீன தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி பல நாடுகளிலும் பிரச்சினைகளை மூட்டிவிட்டு கலவர நெருப்பில் குளிர்காய நினைக்கும் நாடுகளின் தலைமைப்பொறுப்பில் உள்ளதல்லவா. அதனால் இவர்களின் கூற்றை உண்மையென எப்படி நம்புவது என்ற தயக்கமும் நம்மில் பலருக்கு வருவது இயற்கையாகும். வரலாற்று நிகழ்வுகளில் அமெரிக்காவின் கடந்த கால செயல்பாடுகள் எதுவும் நியாயத்தின் பக்கம் இருந்ததற்கான சான்று இல்லையே.

மேலும் நாசாவின் தகவல்கள் எந்த அளவில் உண்மையோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்பதை அலசி ஆராயக்கூடிய பொருள் வளமும் அரசியல்வாதிகளின் மன வளமும் நம்மைப் பொறுத்தவரை சாதகமாக இல்லை. சாதகமாக இல்லையென்பதற்காக நமது நம்பிக்கைகளையும் உணர்வுகளையும் கைவிட்டுவிட முடியாது.

எனவே புறச்சான்றுகளை ஆராய்ச்சி செய்கின்ற விஞ்ஞான மனப்பான்மையை தற்காலிகமாக நிறுத்தி வைத்துவிட்டு அகச்சான்றுகளை ராமாயணம் உண்மை என்பதற்கான ஆதாரங்கள் எவையேனும் இருக்கிறதா என்று தேடிப்பார்ப்பதைத்தவிர வேறு வழி நமக்கில்லை.