கொரோனா முடிந்தும் விவசாயியாக மாறி ஏழைகளுக்கு உணவளிக்கத் தயாராகும் இந்தியக் கிரிக்கெட் பிரபலம்..!!

கொரோனா பிரச்சினை முடிந்ததும் விவசாயியாக மாறி உணவு தானியங்களைப் பயிரிட்டு அதை வசதியற்ற ஏழைகளுக்கு அளிக்கப்போவதாக இந்திய அணியின் முன்னாள் ஓஃப் ஸ்பின்னர் ஹர்பஜன் சிங் இன்ஸ்டாகிராம் உரையாடலில் தெரிவித்துள்ளார்.ஹர்பஜன், அஸ்வின் இருவரும் இன்ஸ்டாகிராமில் உரையாடல் நிகழ்த்தினர்.அதில் ஹர்பஜன் சிங் கூறியதாவது;
மனிதர்களுக்கு சில பாடங்களைக் கற்பிக்கவே கொரோனா வைரசை கடவுள் கொடுத்துள்ளார்.வீட்டில் இல்லாமல் ஓடினோம். பணத்தின் பின்னால் ஓடினோம், பேராசையுடன் வாழ்ந்தோம். கொரோனாவை கொடுத்து பணம் மட்டுமே முக்கியமல்ல என்பதை கடவுள் உணர்த்தியிருக்கிறார்.நான் சம்பாதித்த பணத்தை என் எஞ்சிய வாழ்நாளில் செலவு செய்ய முடியாது. அந்த அளவுக்கு பணம் தேவையில்லை. நமக்கு இப்போது தேவை பிறர் மீதான அன்பும் அரவணைப்பும்தான், இதைத்தான் கொரோனா நமக்குக் கற்றுத் தந்துள்ளது.ஒருவருக்கு ஒருவர் உதவியாக இருக்க வேண்டும், எளிமையாக வாழ வேண்டும். இதைத்தான் கொரோனா நமக்கு கற்றுக் கொடுத்துள்ளது.கொரோனா முடிந்ததும் பஞ்சாப் திரும்பி நிறைய நிலம் வாங்கவுள்ளேன். காய்கறி, கோதுமை பயிரிட்டு விவசாயியாக மாறவிருக்கிறேன்.விளையும் தானியங்களை கோயிலுக்கும், ஏழை எளியவர்களுக்கும் இலவசமாக வழங்குவேன். பணத்தை தேடி அலைந்தது போதும் என்று கருதுகிறேன். இதில்தான் எனக்குத் திருப்தி இருக்கிறது என்றார்.இதேவேளை, அஸ்வின் மீது ஹர்பஜன் பொறாமை உணர்வுடன் இருக்கிறார் என நீண்டகாலமாக சொல்லப்பட்டு வரும் கருத்து குறித்தும் ஹர்பஜன் பேசினார்.நிறைய பேர் நான் பொறாமை பிடித்தவன் அது இது என்று பலதையும் கூறுகின்றனர். அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறிக்கொள்ளட்டும்.நான் உங்களிடம் (அஸ்வின்) கூற விரும்புவதெல்லாம் இப்போது நீங்கள்தான் உலகின் சிறந்த ஓஃப் ஸ்பின்னர்.எனக்கு நதன் லயனையும் பிடிக்கும்.அவுஸ்திரேலியாவில் ஸ்பின் கடினம். அங்கு அவர் சிறப்பாக வீசி வருகிறார். நீங்கள் (அஸ்வின்) உருவாகி வரும் லெஜண்ட்களில் ஒருவர். நீங்கள் நிறைய விக்கெட்டுகளை வீழ்த்த வாழ்த்துகிறேன் எனவும் அவர் மேலும் தெரிவித்திருக்கிறார்.