அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்குகிறோம், அனைத்து அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் தலிபான்கள் அதிரடி அறிவிப்பு!

ஆப்கனில் பொது மன்னிப்பு வழங்குகிறோம், அனைத்து அரசு ஊழியர்களும் பணிக்குத் திரும்ப வேண்டும் என, தலிபான்கள் அறிவித்துள்ளனர்.

தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானை, தலிபான் பயங்கரவாத அமைப்பு கைப்பற்றி உள்ளது. கடந்த 1990களில் தலிபான் ஆட்சி செய்தபோது கடுமையான சட்டங்கள் அமல்படுத்தப்பட்டன.

தற்போது தலிபான்கள் கையில் மீண்டும் ஆப்கன் சிக்கியுள்ளதால் முன்பு போல் கடும் சட்டங்கள் அமலாகும் என மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், தலிபான்கள் சார்பில் அதன் செய்தித் தொடர்பாளர் ஜபீஹுல்லா முஜாஹித் கூறியுள்ளதாவது,

ஆப்கனில் அரசு ஊழியர்கள் உட்பட அனைவருக்கும் பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. அவர்கள் வழக்கமான வாழ்க்கையை நம்பிக்கையுடன் நடத்தலாம். அரசு ஊழியர்கள் தங்கள் பணிக்கு திரும்ப வேண்டும்.

மக்களின் உயிரும், சொத்துக்களும் பாதுகாப்பாக இருக்கும். யாரையும் பழிவாங்க மாட்டோம். நாங்கள் மக்களின் சேவகர்கள். இஸ்லாமிய சட்டங்களுக்கு உட்பட்டு பெண்களின் உரிமைகள் மதிக்கப்படும் என உறுதியளிக்கிறோம்.

பத்திரிகை உள்ளிட்ட ஊடகங்கள் சுதந்திரமாக செயல்படலாம். மற்ற நாடுகளை தாக்குவதற்கு இந்த மண்ணை பயன்படுத்த யாரையும் அனுமதிக்க மாட்டோம். நம் நாட்டின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்வோம் என அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, ஹிந்து மற்றும் சீக்கிய மதத் தலைவர்களை சந்தித்து, அவர்களுடைய பாதுகாப்பை உறுதி செய்வதாக தலிபான்கள் கூறியுள்ளனர்.

‘நான் தான் ஆப்கன் அதிபர்’

அதிபர் அஷ்ரப் கனி, நாட்டை விட்டு வெளியேறியுள்ளார். அவர் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. இந்நிலையில் துணை அதிபர் அம்ருல்லா சலேஹ், சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது,

அதிபர் நாட்டில் இருந்து வெளியேறியுள்ளார். ஆப்கன் அரசியல் சாசனத்தின்படி, தற்காலிகமாக பொறுப்பு அதிபராக நான் உள்ளேன். அனைத்து தலைவர்களும் ஒருமனதாக இதற்கு ஆதரவு தர வேண்டும் என கூறியுள்ளார்.

அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து தலிபான்களுடன், முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய், அமைதி பேச்சு குழு தலைவர் அப்துல்லா அப்துல்லா உள்ளிட்டோர் பேச்சு நடத்தி வருகின்றனர்.

தலிபான்களுக்கு பேஸ்புக் தடை

ஆப்கனை தலிபான்கள் கைப்பற்றியதை அடுத்து, சமூக ஊடக நிறுவனமான ‘பேஸ்புக்’, அதன் கொள்கையை அறிவித்துள்ளது. இது குறித்து பேஸ்புக் செய்தி தொடர்பாளர் ஒருவர் கூறியதாவது, அமெரிக்க சட்டப்படி தலிபான் ஒரு பயங்கரவாத அமைப்பு என தடை செய்யப்பட்டுள்ளது.

அதை பின்பற்றி எங்கள் நிறுவன கொள்கைப்படி, தலிபான் தொடர்பான செய்திகளை தடை செய்துள்ளோம். தலிபான் அல்லது அவர்கள் சார்பில் பேஸ்புக்கில் துவக்கப்பட்ட அனைத்து கணக்குகளும் நீக்கப்பட்டுள்ளன.

எங்களிடம் ஆப்கன் மொழி வல்லுனர்கள் குழு உள்ளது. இக்குழு, பேஸ்புக் மற்றும் எங்கள் துணை நிறுவனங்களான வாட்ஸ்அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றில் பகிரப்படும் தலிபான் ஆதரவு செய்திகளை கண்டு பிடித்து தரும். உடனடியாக அந்த தகவல்கள் அகற்றப்படும் என கூறினார்.

பேஸ்புக் இவ்வாறு அறிவித்த போதிலும், தலிபான்கள் வாட்ஸ்அப் வாயிலாக தொடர்ந்து தகவல் பரிமாற்றத்தில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

பயங்கரவாத அமைப்புகள் காபூலில் ஊடுருவல்

ஆப்கன் தலைநகர் காபூலை நோக்கி தலிபான்கள் சமீபத்தில்சென்ற போது, அவர்களுடன் தலிபான் கொடி ஏந்தி, ஐ.எஸ்., லஷ்கர் – இ – தொய்பா, ஜெய்ஷ் – இ – முகமது உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினரும் நகரில் நுழைந்து விட்டதாக கூறப்படுகிறது.

இது, குவட்டாவில் தங்கியிருந்த தலிபான் தலைவர் முல்லா யாகூபுக்கு தெரியவந்ததை அடுத்து, அவர் உடனடியாக காபூல் வந்தார்.

தலிபான் தலைவர்களுடன் கலந்தாலோசித்து, ஐ.எஸ்., உள்ளிட்ட பயங்கரவாத அமைப்பினரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு உள்ளார்.

இதற்கு பயங்கரவாதிகள் இணங்காதபட்சத்தில் இரு தரப்பினர் இடையே மோதல் நிகழ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அமெரிக்கா – தலிபான் இடையிலான ஒப்பந்தத்தில் ஆப்கனில் பயங்கரவாத அமைப்புகளுக்கு இடமளிக்கக் கூடாது என்ற முக்கிய நிபந்தனை இடம் பெற்றுள்ளது.

‘அதனால் தலிபான் உத்தரவுக்கு பயங்கரவாத அமைப்புகள் அடிபணிய வேண்டும்’ என, தலிபானுடன் தொடர்பில் உள்ள, மனித உரிமை ஆர்வலர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஆட்சி அமைக்க ஆலோசனை

ஆப்கனில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக அந்நாட்டு முன்னாள் அதிபர் ஹமித் கர்சாய், முன்னாள் தலைமை செயல் அதிகாரி அப்துல்லா ஆகியோரின் ஆதரவை தலிபான் தலைமை நாடியுள்ளது.

கத்தாரில் இருந்து தலிபான் அரசியல் தலைமைக் குழு காபூல் திரும்பியதும் ஆட்சி அமைப்பதற்கான நடவடிக்கைகள் துவங்கும். காபூலில் பிற பயங்கரவாத அமைப்புகள் வேரூன்றாமல் மக்களை பாதுகாக்க வேண்டிய முக்கிய பொறுப்பு, தலிபானுக்கு உள்ளது.

ஆனால் போதுமான போலீஸ் படை இல்லாத நிலையில், காபூல் மட்டுமின்றி பிற நகரங்களிலும் பயங்கரவாத அமைப்புகளால் கலவரம் ஏற்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.